கல்யாண சாவு

  அந்தக் கட்டிலுக்கு வாய் இருந்திருந்தால் கதறி அழுதிருக்கும்; அறுபது ஆண்டுகளாக தான் தாங்கிய சுமை, இனி பாதியாகக் குறையப் போவதையெண்ணி நிச்சயம் நிம்மதி அடைந்திருக்காது. அவர்களது மிகப்பெரும் வம்ச உருவாக்கத்திற்கு துணையாக அந்த கட்டில் இருந்திருக்கலாம்; ஆனால் ஒரு பேரனாக நான் கண்டவையெல்லாம், அந்த முதிர்ந்த வயதிலும் அவர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்ட காதலைத் தான். ஒருவருக்கு உடல்நலம் குன்றும் போதெல்லாம் மற்றொருவர் தாயாக மாறுவதைக் கண்டிருக்கிறேன்.


படுக்கவைக்கப்பட்டுள்ள பிரேதத்தின் அருகிலிருந்து  சுப்பிரமணியை அப்புறப்படுத்துவதே பலருக்கும் கடினமான ஒன்றாக இருந்தது. நடக்கவிருந்ததை முன்கூட்டியே அறிந்துவிட்டதால் தானோ என்னமோ ஒரு வாரமாக அழுதுகொண்டே இருந்தானோ? அவனை அவர்களிருவரும் ஒரு கொள்ளுப்பேரனைப் போலவே நடத்தினார்களேயன்றி நாயாக அல்ல.


ஆத்தாவின் மரணத்திற்கான எச்சரிக்கை தான் சுப்பிரமணியின் அழுகையென்று எங்கள் எல்லோருக்கும் ஓரிரு நாட்களிலேயே புரிந்து  விட்டது. தாத்தாவை விட ஆத்தாவிற்கு ஐந்து வயது குறைவு. ஆனாலும் ஆத்தாவின் உடல் சீக்கிரத்திலேயே நொடித்துப் போய்விட்டது. உடலில் இரத்த ஓட்டம் குறைந்தது அந்த வெளிறிப்போன முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. நாடித்துடிப்பு குறைந்துவிட்டதாகக் கூறி வைத்தியரும் நாள் குறித்துவிட்டார். ஆத்தாவிற்கு பிடித்தமான பதார்த்தங்களை எல்லாம் சாப்பிடக் கொடுத்தோம்.


என்னதான் உடல் தளர்ந்து போனாலும் நடமாட்டமும், தாத்தாவிற்கு  பணிவிடைகள் செய்வதில் இருந்த மெனக்கெடலும் கொஞ்சமும் ஆத்தாவிடம் குறையவேயில்லை. ஆத்தாவுக்கு சாவைப் பற்றிய பயம் இல்லை. மாறாக, தனக்குப் பிறகு தாத்தாவை யார் பார்த்துக்கொள்வார்கள் என்பதே கவலை. 


"எங்களுக்கு எந்த செறிக்கிப் பயலும் பீ மூத்திரம் அள்ளுற நெலமைக்கு நான் உடமாட்டன், தாங்குற வரைக்கும் பாப்பன். முடியாத பட்சத்துக்கு நானும் ரவை குருணியத் திண்ணுட்டு, எங்கய்யாவுக்கும் குடுத்து கூட்டிட்டுப் போயிடுவன்''. - கோபப்படும் போதெல்லாம் ஆத்தா சொல்லும் வார்த்தைகள். 

"கெழவிக்கு ரோசம் கொஞ்சம் அதிகம்"


தாத்தா மிகவும் சாந்தமானவர். ஆறடிக்கும் மேல் உயரம். பாட்டாளியின் உடற்கட்டு. கருத்த தேகம். தோளில் விழும் தனது நீண்ட கூந்தல் மேலும் கம்பீரத்தை அதிகரிக்கும். தாத்தாவுடன் எங்காவது செல்லும் போது அவரது நடைக்கு ஈடுகட்ட நாங்கள் ஓடவேண்டியாதயிருக்கும். 

  ஆத்தாவை பெயர் சொல்லிக் கூட அழைக்கமாட்டார். தனது மனைவியை அம்மா என்று அவர் அழைப்பதைக் கேட்கும் போது ஒரு குழந்தையைப்  போல இருக்கும். தாத்தாவுக்கு உலகமே ஆத்தா தான். அவர்களிருவரும் ஓரிரவு கூட பிரிந்திருந்ததாக எனக்கு நினைவில்லை.


ஆத்தாவின் உடல்நிலை குன்றி வருவதைப் பற்றிய சிந்தனை, தாத்தாவின் மனதில் ஏற்படுத்திய தாக்கம் வெளிப்படையாகவே எல்லோருக்கும் தெரிந்தது. வழக்கமாக நடையில் இருந்த வேகம் குறைந்திருந்தது. பேச்சும் குறைந்து போனது. சிந்தனையிலேயே பொழுதைக் கழித்தார்.


எங்கள் அனைவரின் கணிப்பும் தவறாகிப் போனது. வழக்கத்திற்கு மாறாக அன்று காலை சூரியன் வந்தபின்னும் தாத்தா எழவில்லை.  கொள்ளையில் அவருக்காகக் காத்திருந்த பசுக்களும் கன்றுகளும், அந்த பொக்கை வாய் சிரிப்பை காணமுடியாமல் தவித்தன. தனக்கிருந்த மிச்சம் மீதி தெம்பும் அழுகையில் அழிந்துக்கொண்டிருந்தது ஆத்தாவுக்கு.


மிகப்பெரும் வம்சத்தை உருவாக்கி வைத்திருந்தவரது வழியனுப்பு விழா எளிமையாகவா நடந்து விடும்? ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. தெருவை அடைத்து பந்தல் போடப்பட்டது.  மேள தாள வாத்தியங்கள் அதிர்ந்து கொண்டிருந்தன. தாத்தாவின் இறுதிப் பயணத்திற்கான வாகனம் பிரம்மாண்ட ரதமாகத் தயாராகிக் கொண்டிருந்தது. ஆட்டோ மூலம் மரண அறிவுப்பு சுற்றுவட்டார கிராமங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. மரியாதை நிமித்தமாக இறுதிச் சடங்கிற்கு ஒரு குறிப்பிட்டத் தொகையை பஞ்சாயத்துக் காரர்கள் வழங்கினர்.


அத்தனை ஆண்டுகள் உழைத்தும் சொத்து ஏதும் சேர்த்து வைக்கவில்லை என்று தாத்தாவைப் பற்றி சிலர் குறைப்பட்டுக்கொள்ள கேட்டிருக்கிறேன். ஆனால் தாத்தா சேர்த்த சொத்து என்னவென்று அன்று அனைவரும் உணர்ந்தோம். ஒருவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அவரது மரணத்தின் போது தான் அறியமுடியும்‌ என்று புரிந்தது. 


அன்று அந்த கிராமத்தில் வேறெந்த நிகழ்வும் நடைபெறவேயில்லை என்றே கூறலாம். ஒரு கிழவனின் இறப்பினால் ஊரே சோகத்தில் இருந்தது என்றில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகளாக பாகுபாடின்றி அனைவரிடமும் அன்பு செலுத்திய, நேர்மையான ஒரு நல்ல மனிதனுக்கு மரியாதை செலுத்த எண்ணினர்.

வந்திருந்த அனைவரும் தாத்தாவைப் பற்றிய தங்களது நினைவுகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். இறப்பு தான் ஒருவரது நற்குணங்களை நினைவுப்படுத்துகிறது.


"எங்க இருந்தாலும் எனக்கு நெய்ப்பந்தம் புடிக்க வந்திருங்கப்பா"- தாத்தா அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். அவரது பேச்சை நாங்கள் மீறவில்லை. பேரன், கொள்ளுப்பேரன், எள்ளுப்பேரன், பேத்திகள் என்று எண்ணிக்கை அரைசதம் நெருங்கியது. தாத்தாவின் சொந்த ஊரான திருக்கடையூரின் அசுபதி கிணற்றிலிருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. குளிப்பாட்டுவதற்காக மகன்கள், பங்காளிகள் அனைவரும் உள்ளூர் கோவில் குளத்திலிருந்து நீர் எடுத்து வந்தனர்.


பொதுவாக வயதானவர்களின் உடலில் இருக்கும் பிசுபிசுப்பும், அவர்கள் மீது இருக்கும் ஒருவித நாற்றமும் தாத்தாவிடம் எப்போதும் இருந்ததேயில்லை. காரணம் ஆத்தா தான்.  தாத்தாவைக் குளிப்பாட்டுவதில் ஆத்தா காட்டும்‌ மெனக்கெடல் அதிகம். நீரை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்வதிலும், ஈரம் போவதற்கு தலைக்கு சாம்பிராணி காட்டுவதிலும் ஒரு‌ குழந்தைக்குக் காட்டும் கவனம் செலுத்தினார்.



"நீ கால் வச்ச பூமியெல்லாம் பால் வடிய செஞ்சீங்களே! கண்ணுல நீர் வடிய செஞ்சுப்புட்டு என் நூலறுத்துப் போனதென்ன?"

"சாவடிக்கு நீ போக சனங்கலெள்ளாம் கும்புடுமே! உன்ன காவடியில் தூக்கி செல்ல ஆசைக்கொண்டு போனீரோ? உன் காலடியில் கெடக்குமிந்த முண்டச்சிய நெனைக்கலியோ?"

"கொள்ளைக்குப் போகையிலும் சொல்லிட்டுப் போவிங்களே! கொள்ளிக்குப் போகப் போறத சொல்லலயே ராசாவே!"

ஆத்தாவின் அந்த வலுவிழந்த குரலில் வழிந்த சோகம் அனைவரின் மனதையும் கரைத்தது.


குளிப்பாட்டுவதற்காக குளத்திலிருந்து கொண்டு வந்த நீரை எடுத்து தாத்தாவின் மீது ஊற்றியது தான் தாமதம். 

"அய்யோ! எங்க ஐயா மேல பச்சத்தண்ணி ஊத்தாதீங்களன்! எங்கய்யாவுக்கு குளுருமே!" என்று தனது மொத்த வலுவையும் கொண்டு அலறியபடி தாத்தாவின் மீது ஆத்தா விழுந்து அமைதியானாள்.


பாடையின் அகலத்தை அதிகரிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது.


கருத்துகள்

  1. 👏👏👏👏👏👏👏👏.. அருமை 👌 👌 👌 👌...

    பதிலளிநீக்கு
  2. என்ன தவம் செய்தார்களோ மரணத்திலும் பிரியாத வரம் பெற.

    உன் எழுத்து நன்கு முதிர்ச்சி பெற்றிருப்பது தெரிகிறது. கதை படிப்பது போல எண்ணமே இல்லை. ஏதோ அவர்கள் இறுதி சடங்கை பார்ப்பது போல உள்ளது.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. ஆத்தாவின் ஒப்பாரி தமிழ் உன் எழுத்து புலமையை எடுத்துகாட்டுகிறது 👌👌👌👌👌அருமை

    பதிலளிநீக்கு
  5. ஒப்பாரி வரிகள் உயிர்ப்புடன் இருக்கிறது. கவரும் எழுத்து நடை.கிராம வழக்கு சிலருக்கு தான் கைகூடும் நம் கதாசிரியரைப் போல👌👌👌

    பதிலளிநீக்கு
  6. Yes .......antha kelavikku "ROSAM" athigam.....So
    """Paadaya agala paduthum Pani theeviram""""
    .........semma lyrics.......

    பதிலளிநீக்கு
  7. இறப்பு தான் ஒருவரது நற்குணங்களை நினைவுப்படுத்துகிறது----good one....

    Super bro nalla eluthurikinga i really felt that bond between them....and you connected us with them with your words....

    Keep doing more like this...😍😍😍

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தீர்ந்த நீரும் தீராத் தாகமும்

நல்ல நேரம்