அடக்க மறு
ஆண்கள் அழக்கூடாது என்று சமூகம் ஏற்படுத்திய பிம்பத்தினாலும், தனது அழுகை வீட்டிலுள்ளோரை சங்கடத்திற்குள்ளாக்கும் என்று நினைத்ததாலும், தனது நிலையை நினைத்து மனதிற்குள் அழுதுகொண்டிருந்தான் அவன். எப்போதும் தான் சாப்பிட்ட தட்டினைத் தானே எடுத்து செல்லும் பழக்கம் உள்ளவனின் தட்டை இன்று அவனது அப்பா எடுத்து செல்வதை இவனால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஒருவாரமாக இதேதான் வீட்டில் இவனது நிலை. அடிக்கடி ஏற்படுவது போல இம்முறையும் இவனது கால்களில் ஏற்பட்ட வலியும் வீக்கமும் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என்ற இவனது கணிப்பு பொய்யாகிப் போனது. ஒரு வாரத்தைக் கடந்தும் வலியும் வீக்கமும் குறையவே இல்லை. தொடக்கத்தில் இடது கால் கட்டை விரலில் மட்டும் தொடங்கிய வலி கொஞ்சம் கொஞ்சமாக பாதம் முழுமைக்கும் பரவியதோடு மட்டுமின்றி கால் கொழுக்கட்டையைப் போல் வீங்கி விட்டது. இரு கால்களையும் தரையில் ஊன்றி நடப்பது அவ்வளவு எளிய காரியமாக இல்லை அவனுக்கு. பாதம் முழுமைக்கும் ஊசிகளால் குத்துவது போன்று வலி இருந்தது. சிறிது அழுத்தம் கொடுத்தால் கூட வலி தொடை வரை பரவியது. கழிவறை செல்வதுகூட இவனுக்கு கடினமானதாகவே இருந்து வருகிறது. ...