கருவாட்டுக் குழம்பு

 தான் படித்த படிப்பிற்கு சம்பந்தமில்லாமல், பணியில் மனநிறைவும் இல்லாமல் வேலைசெய்யும் பலரில் அவனும் ஒருவன். பழமையான துறையாயினும் பலரால் மறக்கப்பட்டு வரும் அஞ்சல் துறையில் பணிபுரியும் அவனுக்கு அருகிலுள்ள கடலோர கிராம மக்களுக்கு கடிதங்களைக் கொண்டு செல்லும் பணி. 

தனிநபர்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றங்களைத் தொழில்நுட்ப வளர்ச்சி கையகப்படுத்தி விட்டமையால், வங்கி மற்றும் இதர தொழில் சார்ந்த கடிதங்களே எஞ்சியுள்ளன. தனது பணியில் இல்லாத மன நிறைவை கடலின் அலைகளும் இரைச்சல்களும் அவனுக்கு அளித்துக் கொண்டிருந்தன.

மனிதர்களின் துன்புறுத்தல்களை யெல்லாம் பொறுத்துக் கொண்டிருந்த சமுத்திரத் தாயின் ஒரு நாள் சீற்றத்திற்கு இரையான கிராமங்களில் அதுவும் ஒன்று. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நகரங்கள் கடலுக்குள் மூழ்கியதாக சொல்லப்படும் கதைகளை உண்மையென உணர்த்தும் கிராமம் அது.

சிதிலமடைந்த வீடுகளின் சுவர்களே ஆங்காங்கு எஞ்சியிருக்கின்றன. சில குடும்பங்கள் மட்டுமே சேதமடைந்த வீடுகளை சரிசெய்து அங்கு வாழ்ந்து வருகின்றனர். தனியாக குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கப் பட்டாலும் தொழிலுக்காக அம்மக்கள் அங்கு வந்துதானே ஆகவேண்டும். எந்திரங்கள் பொருத்தப்பட்ட ஃபைபர் படகுகளும் அதனுள் மூட்டைகளாக இருந்த வலைகளும் கடல் அன்னைக்குத் துணையாக இருந்தன. 

எப்போதும் போல அன்றும் கடிதங்களை எடுத்து வந்த அவன் கிராமத்திற்குள் நுழைந்தான். வெயிலின் தாக்கம் சற்று தணிந்திருந்ததால் ஆண்கள் ஆங்காங்கே வலைகளைப் பிண்ணிக் கொண்டிருந்தனர். மீனவ சமுதாய மக்கள் மீது இவனுக்கு ஏனோவொரு பயமும் சலிப்பும் இருந்து கொண்டே இருந்தது. 

அவர்களது வாட்டசாட்டமான உடலைமைப்பும் கரடுமுரடான பேச்சும் அவர்களுடன் பேசுவதில் இவனுக்குத் தயக்கத்தை ஏற்படுத்தின. ஒருமுறை மீனவர் ஒருவர், இலங்கைப் படையினரால் தாக்கப்பட்ட தனக்கு உதவாத மத்திய அரசை புறக்கணிப்பதாகக் கூறி அவனை மறித்த சம்பவம், அவனுக்கு இவ்வுணர்வை மேலும் அதிகரித்தது.

அன்று அவன் கொண்டுவந்த கடிதங்களில் ஒன்றின் விலாசதாரரான  ராமாயியின் வீட்டைக் கண்டறிந்து விட்டான். எஞ்சியிருக்கும் சில வீடுகளில் அதுவும் ஒன்று. வீட்டு வாசலில் பல வடிவங்களில்  காயப்போடப் பட்டிருந்த கருவாடுகளின் நாற்றம் வீதியெங்கும் வீசியது. கணவாய் மீனின் கருவாட்டைத் தவிற மற்றவை எந்த மீன்கள் என்பன பற்றி இவனால் கண்டறிய முடியவில்லை.

பல முறை கத்தியபிறகு வீட்டுக்குள் இருந்து சிறுமி ஒருத்தி வந்தாள். நாற்றத்தை அடக்கிக் கொண்டிருந்த அவன் கடிதத்தைக் கொடுத்து விடலாம் என்று நினைக்கயில் அச்சிறுமி, "ஆயா! ஆயா!" என்று கத்திக்கொண்டே உள்ளே சென்று விட்டாள். சிறிது நேரத்தில் சிறுமியுடன் பாட்டியும் வந்தாள்.

"தபால் வந்திருக்கு இந்தாங்க" என்றபடி அங்கிருந்து வெளியேற முயன்றான். 

"எங்ஙன இருந்துப்பா வந்துருக்கு?" என்ற பாட்டியின் கேள்வியை சலிப்புடன் எதிர்நோக்கியவன், அக்கடிதம் சிறையிலிருக்கும் பாட்டியின் மகன் அனுப்பியது என்பது தெரியவரும்போது நிதானமானான்.

"படிக்கத் தெரியாதுய்யா, என்னாருக்குனு சொல்லிட்டுப் போயா" என்றாள் பாட்டி.

கருவாடுகளின் நாற்றத்திலிருந்து வெளியேற வேண்டுமென்ற அவசரத்தில் படிக்கத் தொடங்கிய அவனின் வேகம் சில நொடிகளில் அடங்கிப்போனது. சற்று கிறுக்கலான கையெழுத்தில் எழுதப்பட்ட அக்கடிதம் அவனுள் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

"அம்மா நல்லாருக்கியா. பாப்பா எப்புடி இருக்கா. இங்க எனக்கு கஷ்டமா இருக்குமா. மாமாட்ட சொல்லி சீக்கிரம் ஜாமின் எடுக்க சொல்லுமா.  ஓன் பேச்ச கேட்ருந்தன்னா இந்த நெலம வந்துருக்காதுமா.  என்ன மன்னிச்சிருமா.  இனிமே நீ சொல்றபடியே நடந்துக்றன்மா. உங்களலாம் பாக்கனும்போல இருக்கு. திங்க கெழம காலைல என்ன கோர்டுக்கு கூட்டிட்டு வராங்க. பாப்பாவ கூட்டிட்டு நீ வாமா'' என்றபடி கடிதம் முடிந்தது.

அக்கடிதத்தை வாசித்து முடிக்கையில் அவனது நெஞ்சு கணத்திருந்தது. கடைசி வரிகள் அவன் வாயிலிருந்து வெளிவராமல் தொண்டைக்குள் சிக்கித் தவித்தன. பாட்டியின் கண்களின் ஓரம் வழிந்த கண்ணீரும், அவளது கண்ணங்களில் ஏற்பட்ட நடுக்கமும் இவனை மேலும் கலக்கமடையச் செய்தன. இவர்கள் இருவரது முகங்களையும் மாறி மாறி அச்சிறுமி பார்த்துக்கொண்டு நின்றாள். 

நிதானமடைந்தவனுக்கு சட்டென்று திங்கள்கிழமை நேற்றே முடிந்துவிட்டது நினைவுக்கு வந்தது. சென்ற வாரம் எழுதப்பட்ட கடிதத்தை சரியான நேரத்திற்குள் கொண்டு சேர்க்க முடியாததால், தான் பணிபுரியும் துறையின் மீதும் தன் மீதும் கடும் கோபம் வந்தது அவனுக்கு.

கடிதத்தின் மறுபக்கத்தில் சிறை அதிகாரிகள் மூவர், கடிதம் தணிக்கை செய்யப்பட்டதாகத் தெரிவித்து கையெழுத்திட்டிருந்தனர். ஒவ்வொரு கையொப்பத்திற்குமிடையே ஒவ்வொரு நாள் தாமதமானதை அவன் உணர்ந்தான். "இதுல என்னடா மூனு நாளா சென்சார் பண்ணுணீங்க" என்று மனதிற்குள் கெட்ட வார்த்தைகளால் பொருமிக்கொண்டான்.

அடுத்த சில கணங்களுக்கு அவர்களுக்குள் அமைதியே நிலவியது. அவர்களது துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்ட கடலன்னை மட்டும் வாய்விட்டுக் கதறினாள்.

கண்களைத் துடைத்தவாறே, "அவன் தலையெழுத்து போயிட்டுப் போவுது, நீ சாப்டுட்டு போப்பா" என்றாள் அவள்.

அவனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. வேண்டாமென்று மறுத்து அங்கிருந்து கிளம்ப எத்தனித்தான்.

"நீயும் எம்புள்ள மாறிதான்பா இருக்க, வந்து ரெண்டு வாய் சாப்டு போ" என்றவளின் பேச்சை இவனால் மறுக்க முடியவில்லை.

இப்போது அவனுக்கு கருவாட்டின் நாற்றம் மறைந்து, கருவாட்டுக் குழம்பின் மணம் வீடெங்கும் வீசியது.

 'நாற்றம்' என்பதன் உண்மையான அர்த்தமே 'மணம்' தான் என்று அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.



கருத்துகள்

  1. Now you are working on emotional stories too.. which's an impressive improvement.. Usually, I will cry even for minor emotional scenes in movies or books. This too made me feel sad.. Good job.. Keep it up

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. Wow really Awesome story. I have wounderd about your way of writing style. U have some potential in you. Grow it up and come up in your writing career 🤗👍 my best wishes..

    பதிலளிநீக்கு
  4. கதை நெடுகிலும் அந்த ஒருவனாகவே மாறி..
    "கருவாட்டின் நாற்றத்தையும்" "குழம்பின் மணத்தையும்" உணர்ந்தோம்.

    வாழ்த்துக்கள் நண்பா..

    Waiting for your next story..

    பதிலளிநீக்கு
  5. Vera level 💜 😥👏👏👏👏👏👏👏👏👏👏👏👏.... வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐 💐

    பதிலளிநீக்கு
  6. அருமையான கதை..கதையில் வந்த அனைவரின் வாழ்வியலையும்‌உணர முடிந்து.👏👏

    பதிலளிநீக்கு
  7. அருமையான கதை..கதையில் வந்த அனைவரின் வாழ்வியலையும்‌உணர முடிந்து.👏👏

    பதிலளிநீக்கு
  8. அருமை சகோ..வாசம் என்பது நற்மணத்தை மட்டும் குறிக்காது. நாற்றம் என்பது துர்மணத்தை மட்டும் குறிக்காது.

    கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள கடலில், கொண்டு சேர்த்து விட்டது போல் ஒரு உணர்வு.

    தாமதமாய் கொண்டு சேர்த்த கடிதத்தின் வலி💔

    அருமை சகோ

    பதிலளிநீக்கு
  9. அருமையான கதை👌👏 அந்த இடத்தின் சூழலையும் மக்களின் உணர்வையும் மிக அருமையாக விவரித்துள்ளீர்கள்😊

    பதிலளிநீக்கு
  10. அந்த கைதியாக என்னை ஒரு கணம் நினைத்து கொண்டேன், கண்கள் கலங்கியது.

    பதிலளிநீக்கு
  11. மனதை உருக்கும் கதை இது. மனித நேயத்திற்கு தொண்டுச் செய்யும் தபால் சேவைக்கும் தபால்காரர்களுக்கும் நன்றி. மனித நேயம் இல்லா காவலர்களையும், சட்டத்தைக் கைகளில் அடக்கிக் ஈனச் செயல்களைச் மனசாட்சி இல்லாமல் இருக்கும் அரசு அதிகாரிகளையும் தண்டிக்க ஏதேனும் ஒரு சக்தி இருக்கிறதா என்றுத் தெரியவில்லை. சிறுகதைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் என் பெயர் சூர்யா இன்ஸ்டாகிராமில் உங்களுடைய meme பார்த்து உங்களுடைய கதையை படிக்க துவங்கினேன். இக்கதை எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது சிறிது ஆச்சர்யாத்தையும் ஏற்படுத்தியது. உங்கள் கதைகள் கண்டிப்பாக மக்களிடம் சென்றாடையும். உங்களின் ரசிகன்

    பதிலளிநீக்கு
  13. மனம் நெகிழ வைத்தது ♥️✨

    பதிலளிநீக்கு
  14. நாற்றமோ, நறுமணமோ உண்மையில் நாசியில் உணரப்படுவதில்லை; அவை மனதிலிருந்து உணரப்படுபவை என்பதை அழகாகக் கூறியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  15. It feels like reading a book written in 80s. Iyalbana nadai. Leaving little pain and nameless feeling maybe a joy that he changed his opinions or sad abt the prisoner and his family. It's very nice bro keep writing many stories ❣️

    பதிலளிநீக்கு
  16. இந்த அரசாங்கத்தை நினைத்து கோப்ப்படுவதா,
    கடிதம் காட்டிய வார்த்தைகளுக்கு உருக்கப்படுவதா,
    என்று தெரியவில்லை….
    பாட்டியின் மனதை கண்டு நெகிள்கிறேன்….

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கல்யாண சாவு

தீர்ந்த நீரும் தீராத் தாகமும்

நல்ல நேரம்