அடக்க மறு

 ஆண்கள் அழக்கூடாது என்று சமூகம் ஏற்படுத்திய பிம்பத்தினாலும், தனது அழுகை வீட்டிலுள்ளோரை சங்கடத்திற்குள்ளாக்கும் என்று நினைத்ததாலும், தனது நிலையை நினைத்து மனதிற்குள் அழுதுகொண்டிருந்தான் அவன். எப்போதும் தான் சாப்பிட்ட தட்டினைத் தானே எடுத்து செல்லும் பழக்கம் உள்ளவனின் தட்டை இன்று அவனது அப்பா எடுத்து செல்வதை இவனால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஒருவாரமாக இதேதான் வீட்டில் இவனது நிலை. 


அடிக்கடி ஏற்படுவது போல இம்முறையும் இவனது கால்களில் ஏற்பட்ட வலியும் வீக்கமும் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என்ற இவனது கணிப்பு பொய்யாகிப் போனது. ஒரு வாரத்தைக் கடந்தும் வலியும் வீக்கமும் குறையவே இல்லை. தொடக்கத்தில் இடது கால் கட்டை விரலில் மட்டும் தொடங்கிய வலி கொஞ்சம் கொஞ்சமாக பாதம் முழுமைக்கும் பரவியதோடு மட்டுமின்றி கால் கொழுக்கட்டையைப் போல் வீங்கி விட்டது.


இரு கால்களையும் தரையில் ஊன்றி நடப்பது அவ்வளவு எளிய காரியமாக இல்லை அவனுக்கு. பாதம் முழுமைக்கும் ஊசிகளால் குத்துவது போன்று வலி இருந்தது. சிறிது அழுத்தம் கொடுத்தால் கூட வலி தொடை வரை பரவியது. கழிவறை செல்வதுகூட இவனுக்கு கடினமானதாகவே இருந்து வருகிறது. 


 வலியை விட தன்னால் குடும்பத்தார் அனுபவிக்கும் வருத்தத்தை தான் இவனால் அனுபவிக்க முடியவில்லை. அவனது அம்மா அன்றொரு நாள் தனது தாலியைக் கூட கழற்றி அவனது அப்பாவிடம் கொடுத்து, "எவ்ளோ செலவானாலும் பரவால்ல, புள்ள கால சரிபண்ணனும்" என்று அழுததைப் பார்த்தபிறகும் அவனால் எப்படி வருந்தாமல் இருக்க முடியும்? ஆறடி வளர்ந்த தனது மகன் வீட்டின் ஒரிடத்தில் இருந்து மற்றோரிடத்திற்கு குழந்தைப்போல புட்டத்தால் நகர்வதைப் பார்க்கும் எந்த தாயும் இதையே செய்வாள்.


தூக்கத்தில் இடித்துவிடக்கூடாது என்பதற்காக இவன் தனியாக  கால்களுக்கு  தலையணைகள் வைத்துப் படுக்க வைக்கப்பட்டிருந்தான். மின்விசிறி தரும் காற்றின் அழுத்தம் கூட இவனது காலில் வலியை ஏற்படுத்தியது. அந்த இரவின் அமைதியில் வீட்டின் கீற்றுகளின் வழியே இவன் முகத்தில் பாயும் நிலவொளியில்  தனது இந்த நிலையை நினைத்து வருந்திக்கொண்டிருந்தான். 


கல்லூரிப் படித்த நாட்களில் கூட சிலமுறை இவனுக்கு இதேபோல் வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் அப்போதெல்லாம் 'விளையாடும் போது காலில் ஏற்பட்ட சுளுக்கு' , 'ஒரேபுறமாக படுத்துறங்கியதில் ஏற்பட்ட சுளுக்கு' என்று தனக்குத்தானே நினைத்துக்கொண்டான். இவற்றிற்கெல்லாம் ஒரு படி மேலாக, 'தனது ராசிக்கு சனிப்பெயர்ச்சியில் பாத சனி இருப்பதால் பாதத்தில் வலி வருவதாக' நினைத்துக்கொண்டதை நினைவு கூறும் போது இவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.


இரு நாட்களுக்கு முன்னர் தான் முறையாக மருத்துவரை அணுகி உண்மையான பிரச்சனையை அறிந்துகொண்டான். அவனது இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகம் இருப்பதாக மருத்துவர் கூறினார். புரதச்சத்து அதிகமுள்ள உணவுப்பொருட்களை அளவுக்கதிகமாக உண்பதாலும், மது அருந்துவதாலும் ஏற்படும் கீல்வாதம்  என்று கூறினார். 


 தண்ணீர் குடிப்பதாலும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதாலும் இதனை குறைக்கலாம் என்றும் கூறினார். மேலும் பயப்படும் அளவுக்கு கடுமையான பிரச்சனை ஏதுமில்லை என்றும், சாதாரணமாக பலருக்கு இது ஏற்படுவதாகவும் கூறிய மருத்துவரின் வார்த்தைகள் இவனது பெற்றோருக்கு ஆறுதலளித்தன.


ஒருத்துளி மதுவினைக் கூட அருந்திராத இவனுக்கு இந்நிலை ஏற்பட்டதன் முக்கியமான காரணத்தை மருத்துவர் கூறாவிட்டாலும் கூட இவனால் ஊகிக்க முடிந்தது. சிறுவயது முதலே கூச்சம் சுபாவம் உடையவன் அவன். இவன் படித்த கிராமத்து அரசுப்பள்ளியில் பெண்களுக்கு மட்டுமே கழிவறை இருந்தது. மாணவர்கள் திறந்தவெளியில் தான் சிறுநீர் கழிக்க வேண்டியதாயிருந்தது. சக மாணவர்களின் கிண்டலுக்கு பயந்து பள்ளிப்பருவம் முழுதும் பகல் பொழுதில் சிறுநீரை அடக்கிக் கொண்டு இருந்ததே  இன்று இவன் அனுபவிக்கும் வலிகளுக்கு காரணம் என்பதை உணர்ந்து கொண்டே அழுகையையும் வலியையும் அடக்கிக் கொண்டான்.


கருத்துகள்

  1. Unexpected claimax da👌👌👌semma message👏👏👏school days pre-teen age (11 to 15) பசங்க எல்லோருமே face பண்ற problem இது... But அந்த வயசுல இத வீட்ல சொன்னாலும் சரி teachers கிட்ட சொன்னாலும் சரி 🤷‍♂️🤷‍♂️அவங்க சிரிச்சிட்டு கடந்து போயிருவாங்க 🤷‍♂️🤷‍♂️

    பதிலளிநீக்கு
  2. Wwwwooooooowwwwwwww....உணர்வுகள் மிகுந்த ஆழமான கருத்துடன் நல்ல கதை.. மிகவும் அழகு....

    பதிலளிநீக்கு
  3. இது ஒரு கதை என்பதை தாண்டி இதில் உள்ள கருத்து முக்கியமானது. நான் படிக்கும்போது இதேபோல் தான் பள்ளியில் சரியான வசதிகள் இருக்காது. கதையை அழகாக சொன்னது அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கல்யாண சாவு

தீர்ந்த நீரும் தீராத் தாகமும்

நல்ல நேரம்