விருந்து

 மாநகரின் பிரதான சாலை. மேம்பாலங்கள் அமைந்திருப்பினும் நெரிசல்களுக்குக் குறைவேதுமில்லை.  பலரைப் போலவும் தனது கடந்தகால அடையாளங்களை மறந்து தனக்கென புதியதோர் அடையாளத்தை உருவாக்க வேண்டுமென்ற கனவுடன் மாநகரில் குடியேறியவர்களில் அவனும் ஒருவன்.

 அவனது அறையிலிருந்து சாலைக்கு செல்லும் வழியில் உள்ள குறுகலான நடைபாதையில் அமைந்துள்ளது அய்யனார் ஓட்டல். பட்ஜெட்டுக்குள் சாப்பிடவிரும்பும் அசைவப் பிரியர்களுக்கு ஏற்ற இடம். அக்கடையின் மசாலா வாசனை தெருவெங்கும் மணந்துகொண்டிருந்தது. "நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே" என்று பாரதி விளித்தவையாவும் இலைகளை அலங்கரித்துக் கொண்டிருந்தன. கொத்துப்பரோட்டா போடும் மாஸ்டரின் வடிவில் சிவமணியைப் பார்த்தவாறே அம்மெட்டுக்குத் தலையசைத்துக் கொண்டிருந்தான் அவன்.

அவனுக்கான இரவு உணவு தயாராகிவிட்டது. "தம்பி ஸ்ட்ராங்கா ஒரு டீ எடுத்துக்க" என்றார் கடைக்கார அண்ணன். 'வேற எதாவது வேணுமா?" என்றவரிடம் எதுவும்‌ வேண்டாமென்று விட்டான். விரைவில் ஒருநாள் அங்கு சென்று சாப்பிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே ஓட்டலுக்கு எதிரிலுள்ள டீக்கடையில் நின்று தேநீர் அருந்தினான். கையில் பணம் இருக்கும் தருணங்களைவிட, மாதக்கடைசியில் தான் ஆசைகள் அவனுக்கு அதிகம் ஏற்படுகின்றன.

ஊருக்கு வந்தப் புதிதில் அங்கு சென்று சாப்பிட்டது. எப்போதாவது நண்பர்களின் பிறந்தநாள் விருந்து ஏதேனும் நடைபெறும்போது சாப்பிட நேரிடும்; ஆனால் அவைகளும் அரிய நிகழ்வுகளே. மற்ற நேரங்களில் அம்மா உணவகங்களே வாடிக்கையானவை. காலையும் மதியமும் அம்மா உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு வெளியேறும் போது மனமும் வயிறும் நிறைந்துவிடும். இரவு நேர உணவான சப்பாத்தி மட்டும் அழுத்தமாக இருப்பதால் இவனுக்கு விருப்பம் குறைவுதான். அதுமட்டுமின்றி ஆறரை மணிக்குள் சென்றால்தான் சப்பாத்தி கிடைக்கும். இருப்பினும் நாக்கை விட வயிறு பெரிது என்பதால் அவனுக்கு அந்த அழுத்தங்கள் கூட இலகுவாகவே தெரிகின்றன.

மாதம் ஒருமுறை மட்டும் மதிய உணவினை அருகிலுள்ள ஆந்திரா மெஸ்ஸில் சாப்பிடும் அவன், அந்த ஒருநாள் மட்டும் அவனால் முடிந்த அளவுக்கு சோற்றால்  வயிற்றை நிரப்பிக்கொண்டு நடக்க முடியாமல் நடந்து வருவான். அதுபோல இன்றும் சாப்பிட்டு உறங்கியவன் இருட்டுப்பட்டுத்தான் எழுந்ததால் சப்பாத்தியைத் தவறவிட்டுவிட்டான். காலை உணவைத் தவறவிட்டால் கூட அருகிலுள்ள பிள்ளையார் கோவிலின் பொங்கல் கிடைக்கும்; இரவென்பதால் அதற்கும் வழியில்லை. அநேக நாட்களில் தேநீரே இவனுக்குப் பிரதான உணவாக அமையும்.தான் சந்திக்கும்  சவால்களின் போதெல்லாம், "இதெல்லாம் நாளைக்கு வரலாறுல வரும்" என்று தனக்குத்தானே கூறி சிரித்துக்கொள்வான். அதுபோல இன்றும் கூறிக்கொண்டிருந்த சமயம் அவனது அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

"தம்பி சாப்டியா பா?"

"ம்ம் இப்பதான் மா சாப்டேன், பரோட்டா" .

அடுத்த கேள்விக்கான பதிலையும் முன்கூட்டியே கூறினான்.



கருத்துகள்

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. அனுபவிக்கும் சங்கடங்கள் அன்னையை பாதிக்க கூடாது என எண்ணும் எண்ணம். முழுத் திறனையும் வெளிப்படுத்த தயார்!! எதிர்காலம் எழிலாய் மாறுமா?? என்ற கேள்விக்கு விடை தேடும் தேடல். இப்பாதையில் மிகுந்த நெரிசலுக்கு மத்தில் பயணிக்கும் கோடி இளைஞர்களில் ஒருவன்.....அருமை சகோ

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப அழகு💙.. எதார்த்தமான ஒரு மொழிநடை👏👏..

    பதிலளிநீக்கு
  4. Well done... You have the talent to get the readers attention by your stories.. Keep it up

    பதிலளிநீக்கு
  5. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்வில் இதுவும் கடக்க வேண்டிய ஒரு நிலை தான்! அழகான படைப்பு!!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கல்யாண சாவு

தீர்ந்த நீரும் தீராத் தாகமும்

நல்ல நேரம்