உமிழ்வினை
பணிக்குச் செல்லும் உழைக்கும் வர்க்கம் கூடடையும் நேரம். இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடைப்பட்ட மங்கலான மாலைப்பொழுது. சாலையோரக் கடைகளும் மின்விளக்குக் கம்பங்களும் ஒளியை உமிழத்தொடங்கியிருந்தன. வழக்கம்போல எதிர்காலம் பற்றிய சிந்தனைகளுடன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தான் அவன். அலுவலகத்தில் தனது உயரதிகாரிகளிடம் வாங்கிய திட்டுகளுக்கு பதில் கூறும் தருணம் இதுவே.
என்றைக்கும் இல்லாத அளவு போக்குவரத்து நெரிசல் அன்று அதிகமாக காணப்பட்டது. சாலையின் இருபுறமும் கட்சிக்கொடிகளும் வரவேற்புப் பலகைகளும் நிறைந்திருந்தன. சேலம் வைத்தியரைப்போன்று தங்களது கட்சித்தலைவரின் அடுத்தடுத்த தலைமுறைகளின் குடும்ப உறுப்பினர்களின் படங்கள் அலங்கரித்த பேனர்களைத் தொண்டர்கள் நெடுவெங்கிலும் வைத்திருந்தனர். கட்சியின் முக்கியப் பிரமுகரான சாராய ஆலை அதிபர் வருகைக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் தான் அவை.
இரண்டு மைல் தொலைவிற்கு வாகனங்கள் அனைத்தும் நத்தையாய் ஊர்ந்து கொண்டிருந்தன. எந்தப் பலனும் இல்லையென்று தெரிந்தாலுமே வாகன ஓட்டிகள் ஒலிப்பானைத் தொடர்ந்து ஒலிக்கவிட்டுக்கொண்டே இருந்தனர்.
சுற்றுவட்டாரமே அதிரும் அளவுக்கான கரவொலிகளுடன் தொண்டர் படையினர் நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள்களில் வந்துகொண்டிருந்தனர். ஒவ்வொரு வாகனங்களிலும் குறைந்தது மூவர் அமர்ந்திருந்தனர். அவர்கள் தங்களது கட்சிக்கொடிகளை காற்றில் அசைத்துச் சென்றனர்.
இருசக்கர வாகனங்களைத் தொடர்ந்து உயர்ரக கார்களின் அணிவகுப்பும் நடந்தேறியது. சாலையின் முக்கால்வாசி அகலத்தை கட்சி வாகனங்களே ஆக்கிரமித்திருந்தன. அவை சென்ற வேகத்தில் யாரேனும் சிக்குவானாயின் அவன் கதி அதோகதிதான். இவ்வளவு அமளிகளுக்கும் நடுவே போக்குவரத்து காவலர் நெரிசலை சமாளிக்கும் பணியை மேற்கொண்டிருந்தார். உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அவர் கொண்டிருந்த அழுத்தங்களை அவரது முகம் வெளிக்காட்டியது.
தங்களது கட்சியின் செல்வாக்கை மக்களுக்குக் காட்டுவதற்காக இவர்கள் செய்யும் இதுபோன்ற செயல்கள், பொதுமக்களுக்கு கோபத்தை தான் தரும் என்பது இவர்களுக்குப் புரியாதா என்று சிந்தித்துக் கொண்டிருந்தான் அவன் .
''இவனுங்கலாம் ஆட்சியில இல்லாதப்பவே இப்புடி பன்றானுவோலே, ஜெயிச்சா என்னா அட்டூழியம் பன்னுவானுவோலோ?'' என்று சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தவர் ஒருவர் கூறுவது இவன் காதில் விழுந்தது. தனது மனதில் இருந்ததை அப்படியே கூறிவிட்டார் என்று நினைத்துக்கொண்டே தனக்குள் சிரித்துக் கொண்டான். இவன் காதில் விழுந்ததைப் போலவே சாலையோரம் இருந்த தொண்டர் படையினரின் காதுகளிலும் அது விழுந்துவிட்டது போலும். அவரை சூழ்ந்தவர்கள் கூச்சல்களை எழுப்பத் தொடங்கினர். தனக்குக் கிடைத்திருக்க வேண்டியதை அவர் பெறுகிறார் என்று நினைத்துக்கொண்டிருந்த சமயம், ஒலிப்பான்களின் அலறல் அதிகரித்தது. தனக்கு முன்னிருந்த வாகனங்கள் செல்வதை கவனிக்காமல், சாலையோர சச்சரவை கவனித்துக்கொண்டிருந்ததை அப்போதுதான் உணர்ந்தான்.
''அங்க என்ன மயிரையாப் புடுங்கிட்டு இருக்க? வண்டிய எட்றா ங்கோத்தா" என்று காவலர் கூறிய வார்த்தைகள் இவனை நிலைகுலையச் செய்தன. பதட்டத்துடன் வாகனத்தை ஓட்டத் தொடங்கினான். நெரிசல்கள் குறைந்து சாலையில் இயல்பு நிலை திரும்பினாலும் இவனால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை. மீதமிருந்த பயணத்தொலைவில் தான் சந்தித்த அவமானத்தை நினைத்து வருத்திக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான்.
வீட்டில் வாசலில் வண்டியை நிறுத்தி ஹாரன் அடித்துக்கொண்டிருந்தான். வீட்டு வாசலில் இவனது நாய் மட்டும் வாஞ்சையுடன் இவனது வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தது.கதவு திறப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது. தான் கடந்துவந்த ஹாரன் ஒலியும் கரவொலிகளும் வசைபாடுகளும் இவன் மூளையை ஏதோ செய்தன. லேசாக கதவைத் திறந்து இவன் மனைவி வெளியே வந்தாள். இவன் அடக்கமுடியாத கோவத்துடன், 'ஏன்டி கேட்டைத் தொறக்காம அங்க என்ன மயிரையாப் புடுங்கிட்டு இருந்த?" என்று கத்தினான்
Nal varthaigalum ithupolave oruvaridam irunthu matravaikku kadathapattal nanrai irukkum...muyalvom
பதிலளிநீக்கு💯 This one also related to Teachers life
பதிலளிநீக்குKojam realistic ka iruku da😂😂👌👌காவல் துறையினரின் இத்தகைய வார்த்தைகள் 🤣அந்த கட்சி கொடி,தொண்டர் படை என எல்லாம் சங்கடங்களையும் சமீபத்தில்தான் அனுபவித்தேன்🤦♂️🤦♂️🤣🤣
பதிலளிநீக்குதனக்கு மேலுள்ளவன் தனை வசைபாடுவதை கவனித்து கவனித்து, தன்னை சார்ந்திருப்பவளை வசைபாட தொடங்கி விட்டான்.. அருமை சகோ
பதிலளிநீக்குReally very keen description of a hectic political party procession.... how this is giving dipression to public is well narrated. Keep it up bro
பதிலளிநீக்கு