Time to Reforms



                       சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளாக தந்தை மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மீது அதே பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி இழைக்கப்பட்ட மனித உரிமை மீறலினால் இரண்டு உயிர்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் ஒரு குடும்பத்தை பற்றிய செய்தியினை ஊடகத்தின் வாயிலாக அறியக்கண்டோம்.  கடந்த ஜூன் மாதம் 19-ஆம் தேதி இரவு இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் 20-ஆம் தேதி காலையில் பென்னிக்ஸ் இறந்தவுடன் இந்த செய்தி ஊடகங்களில் வெளியானது.இதனையடுத்து 21-ஆம் தேதி ஜெயராஜும் இறந்தவுடன் வணிகர்களின் போராட்டத்தால் இந்த செய்தி காட்சி ஊடகங்களின் முக்கிய விவாத பொருளாக மாறியது.குற்றம் புரிந்த காவல்துறை அதிகாரிகளின் மீது IPC-302 (Whoever commits murder shall be punished with death or imprisonment for life, and shall also be liable to fine) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதும், குற்றத்திற்கு உடந்தையாக அதிகாரத்தை பயன்படுத்திய சிறை மற்றும் மருத்துவத்துறையை சார்ந்தவர்கள் மீது IPC-300 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய முற்பட்டதும், இவை அனைத்திலும் குற்றப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு துறை (CBCID) அதிகாரிகளை ஈடுபடுத்தியதும், காவல்துறைக்கு ஏற்பட்ட களங்கத்தை அவர்களே துடைப்பதற்கு வழங்கப்பட்ட ஒரு வாய்ப்பாக கருதலாம். 

எல்லா காலத்திலும் காவல்துறையை ஆதரிக்கும் கூட்டமும் உண்டு எதிர்க்கும் கூட்டமும் உண்டு. ஆனால் இந்த இரு கூட்டங்களுமே சிறியது தான். காவல்துறையை ஆதரிப்பதா வேண்டாமா  இல்லை எதிர்ப்பதா வேண்டாமா என்ற குழப்பமான மனநிலையோடு நமக்கு எதற்கு வம்பு என்று ஒதுங்கி நிற்கும் பொதுஜன  கூட்டமே இங்கு அதிகம். ஆனால் மொழிப்போர் போராட்ட துப்பாக்கி சூடு, ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம், சபரிமலை ஐயப்பன் கோவில் லத்தி சார்ஜ், ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கிசூடு, தற்போது சாத்தான்குளம் சம்பவம், இது போன்ற காலங்களில் காவல்துறைக்கும் பொது மக்களுக்கும் பெரும் இடைவெளி ஏற்பட்டு விடுகிறது.இந்த இடைவெளி தற்காலிகம் என்பதை உணராமல் பல இளைஞர்கள் சமூகவலைத்தளங்களில் காவல்துறை மீதான வெறுப்பை பதிவிடுகின்றனர். போதாக்குறைக்கு தமிழ்நாடு பால் முகவர் சங்கம் வேறு ஊடகத்தில் பதிவு செய்த எதிர்ப்பு  சமூகவிரோதிகள் விரும்பும் பொதுஜன சமூகத்துக்கும் காவல்துறைக்கும் உள்ள இடைவெளியை ஆதரிப்பது போல இருந்தது.







இப்படியெல்லாம் காவல்துறையை கலாய்த்த நம் இளைஞர்கள், சாத்தான்குளம் சம்பவத்தையடுத்து திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் உள்ள Check post-இல் கொரோன பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் பிரபு என்பவர் அவ்வழியே தாறுமாறாக வந்த சரக்கு லாரியை  நிப்பாட்ட முயன்ற போது லாரி அந்த காவலரை இடித்துவிட்டு நிற்காமல் சென்றது.காவலர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். விசாரணையில் ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததும் லாரி கர்நாடகாவை சேர்ந்தது என்பதும் தெரியவந்தது.ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டன. தற்போதுள்ள சூழ்நிலையில் யாரும் வருத்தப்படமாட்டார்கள் என்று நான் எதிர்பாத்தேன். ஆனால் அதிர்ச்சி என்னவென்றால் பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பதுதான்.







🤷‍♂️சாத்தான்குளம் சம்பவத்தினால் பொது மக்களுக்கு  ஏற்படும் கோபம் நியமானது தான், அதற்காக இளைஞர்கள் இப்படி வெறுப்பை மட்டுமே கொட்டுவது மக்களுக்கும் காவல்துறைக்கும் உண்டான இடைவெளியை அதிகரிக்குமே ஒழிய ஒருபோதும் இணக்கமான உறவை ஏற்படுத்தாது.இது போன்ற மனித உரிமை சம்மந்தப்பட்ட விஷியத்தில் மட்டுமில்லை லஞ்சம் ஊழல் போன்ற விஷியத்தில் கூட மக்கள் காவல்துறையை தனித்து பார்க்கின்றனர். அரசின் மற்ற துறைகளில் (துறையின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை) ஊழல் இருந்தாலும் அது காவல் துறையை விட பெரிய அளவில் லஞ்சம் பெற்றாலும் நம் மக்கள் பெரிதும் கவலை கொள்வதில்லை காரணம், மற்ற துறைகளில் லஞ்சம் கொடுத்தால் நமக்கு சான்றிதழ் வந்துவிடும், வியாபாரத்திற்கான உரிமம் வந்துவிடும் இப்படி நம் தேவை சார்ந்த ஏதோ ஒரு வேலை முடிந்து விடுகிறது. ஆனால் நம் மக்கள் செய்யும் சிறு சிறு விதி மீறல்களுக்கு காவல்துறையில் கப்பம் கட்ட நேருகிறது.மற்ற துறையில் விருப்பம் இருந்தால் லஞ்சம் கொடுக்கலாம் இல்லை என்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை ஆனால் காவல் துறையில் நாம் சிக்கி கொண்டால் லஞ்சமோ அல்லது அபாரதமோ கட்டினால் தான் நகர முடியும்.விருப்பமுடன் கொடுத்தால் லஞ்சம் இனிக்கிறது 😂வெறுப்புடன் கொடுத்தால் அது அபராதம் ஆனாலும் வெளிப்படுத்த முடியாத கோபமே மிஞ்சுகிறது.ஏன் அந்த கோபத்தை வெளிப்படுத்த முடியவில்லை?? 🤔அங்கே ஏற்படும் தயக்கத்திற்கு பின்னால் ஒருவித பயம் தோன்றுகிறது, எங்கே  காவல்துறையினர் நம் மீது சட்ட நடவடிக்கை  ஏதும் எடுத்து விடுவார்களோ என்கிற   பயம் அது.  தவறு  செய்தவனுக்கு  இந்த பயம் ஏற்பட்டால் பரவாயில்லை சில  நேரங்களில் எந்த  தவறும் செய்யாதவனும் பயப்படுகிறான். இந்த பயத்திற்கு காரணம் சட்ட அறிவின்மை தான்👈👈. 

இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் கணிசமாக அதிகம் தான். இத்தகைய நிலையில் இப்படி அடிப்படை சட்டத்தை பற்றிய விழிப்புணர்வு இல்லாதது அறியாமை என்று சொல்வதைவிட அலட்சியம் என்றே சொல்லியாக வேண்டும்🤦‍♂️🤦‍♂️.  

இந்த  அலட்சியம் அகல பள்ளிக்கல்வி பாடதிட்டத்திலே சட்ட விழிப்புணர்வை வழங்கலாம்.  இதற்காக தனி  பாடத்தை வடிவமைக்க வேன்றுமென்று சொல்லவில்லை, நாம்  அனைவரும் பள்ளியில் தமிழ் செய்யுள் பாடம் படித்திருப்போம்  அதில் ஒவ்வொரு செய்யுளுக்கு பின்னாலும் ஆசிரியர்  குறிப்பு  மற்றும்  நூல்   குறிப்பு  இருக்கும். அதனை தமிழ்  ஆசிரியர்கள் கட்டாயம் படிக்க சொல்வார்கள். காரணம், அதிலிருந்து கேள்விகள்  தேர்வுக்கு  வருமென்பதால்  தான்.  அதுபோல  ஒவ்வொரு பாடத்திலும் சொல்லப்பட்டிருக்கும்  விஷியத்துக்கு சம்மந்தமான சட்டத்தை சிறுகுறிப்பாக கொடுக்கலாம்.  உதாரணமாக, அறிவியலில் ஒரு  கண்டுபிடிப்பை  பற்றி  ஒரு பாடத்தில் படிக்கிறோம் என்றால் கண்டுபிடிப்புக்கான காப்புரிமை  சட்டத்தை (INDIAN PATENT AND DESIGNS ACT-1911) (INDIAN PATENT ACT-1970) (INDIAN PATENT AMENDMENT ACT-2005)   பற்றிய குறிப்பினை  கொடுக்கலாம். 8-ஆம் வகுப்பில் புவியியல் மற்றும் பொருளாதார பாடத்தை பற்றி படிக்கும் போது பொருளாதாரத்தில் சிறந்து விளங்கிய இந்திய அறிஞர்கள் பற்றி படிக்கின்றோம். அந்த படத்திற்கு பின்னால் பொருளாதார குற்றங்களான (MONEY LAUNDERING & HAWALA) பற்றிய குறிப்புகளும் அதற்கான சட்டமுறை தண்டனை பற்றியும் எளியமுறையில் கூறலாம்.  இன்னும்  சொல்லப்போனால்  நாம்  அனைவரும் 1-ஆம்  வகுப்பில்  சாலை  விதிகளை பற்றி  படித்திருப்போம். சிகப்பு விளக்கு எறிந்தால்  நிற்கவும், மஞ்சள் என்றால் தயாராக  இருக்கவும், பச்சை என்றால் நகரவும் என்று படம் போட்டு காட்டியிருப்பார்கள்.அந்த படத்திற்கு கீழ் சாலை விதிகளை மதிக்கவேண்டும் என்று எழுதியிருக்கும். ஆனால் விதிகளை மீறினால் சட்டப்படி காவல்துறையின்  நடவடிக்கைக்கு  உட்படுத்தப்படுவோம் என்று குறிப்பிட தவறுகிறோம். இது போன்ற சட்ட குறிப்புகளை எளிய முறையில் குடுத்து இரண்டு மதிப்பெண் கேள்விகளுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை கொடுக்கலாம்.

இளைஞர்களின் இந்த சட்ட அறிவின்மையின் தாக்கம் எங்கு செல்கிறதென்றால், அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சம்பவத்தினாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட வழக்கில் காவல்துறையின் மீது கோபம் ஏற்படும் போதெல்லாம், அதிருப்தியை வெளிக்காட்ட குறிப்பிட்ட வழக்கை மத்திய புலனாய்வு துறைக்கு (CBI) மாற்ற அரசுக்கு மறைமுக அழுத்தம் கொடுக்கிறார்கள். அத்துறை  காவல்துறைக்கு  சம்மந்தமில்லாதது  என்று நினைத்து கொள்கிறார்கள் போலும். ஆனால் CBI பொறுத்தவரை  கண்காணிப்பாளர்  மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் இருபவர்களில் 65%  சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தியா  காவல் பணி (IPS) சார்ந்தவர்களே,  35% சதவீதம் பேர்  தான் Staff Selection Commission  நடத்தும் Combined Graduation Level  தேர்வில்  தேர்ச்சி பெற்று சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் போன்ற  பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து   பதவி  உயர்வு பெற்று  
கண்காணிப்பாளர் போன்ற பதவிகளில் இருப்பவர்கள். இவையனைத்திற்கும் மேலாக காவல்துறை ஒரு வழக்கை நீண்ட காலமாக விசாரிக்கிறது, விசாரணை நிலை பற்றிய தகவல் சரிவர கிடைக்கப்பெறுவதில்லை என்று புகார்தாரர் விரும்பும் பட்சத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் -2005 மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆனால் CBI-இல் அது நடக்காது. காரணம், மத்திய புலனாய்வு துறை (CBI) RTI சட்டத்திற்கு உட்பட வேண்டிய சட்ட அவசியம் இல்லை. 

ஒருவேளை அடிப்படை சட்டம் பற்றிய விழிப்புணர்வு நம் மக்களுக்கு வந்துவிட்டால் இது போன்ற சிறை மரண சம்பவங்கள் நடக்காதா என்று கேட்டால். நிச்சயம் நடக்கும் ஆனால் தற்போது நடப்பதை விட சற்று குறைவாக நடக்கும்.

சாத்தான்குளம் சம்பவத்தை பற்றி முதலில் கேள்விப்படும் போது நான் மிகவும் எளிதில் கடந்து சென்றுவிட்டேன். காரணம், ஒவ்வொரு வருடத்திற்கும் சராசரியாக நடக்கும் சிறை மரணங்கள் மற்றும் என்கவுண்டர்களே 400 முதல் 700 என்பது தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (National Crime Records Bureau-NCRB) 2018-ஆம் ஆண்டு அறிக்கையின் தகவல். இதில் பெரும்பாலான வழக்குகளை மாநில மனித உரிமை ஆணையமோ, மத்திய மனித உரிமை ஆணையமோ முழுமையாக விசாரிக்க முடிவதில்லை. காரணம், இதில் 85%  சதவீதத்திற்கும் மேற்பட்ட சம்பவங்களில் சம்மந்தப்பட்டோர் தேடப்படும் குற்றவாளிகளாகவோ, கொலை வழக்கில் சம்மந்தப்பட்டவர்களாவோ இருக்கிறார்கள் என்பது அந்தந்த மாநில காவல்துறையின் பதிலாக உள்ளது. இதுவே Red Corridor Area-வின் கீழ் அடங்கும் மாநிலம் என்றால் naxalite-களுடன் தொடர்புடையவர்கள்  என்று கூறி வழக்கை மூடி விடுகிறார்கள் என்பது மனித உரிமை ஆணையத்தின் குற்றச்சாட்டு.

இதற்கு தீர்வு என்று கவனித்தால் (Police Complaint Authority-PCA) என்ற ஒன்று மட்டும் தான்.     பிரச்சனை என்று வந்தால் புகார் கொடுக்க காவல்துறை உள்ளது. காவல்துறையினால் தான் ஒருவருக்கு பிரச்சனை என்று வரும்போது  அத்துறை சார்ந்த அதிகாரிகளின் மீது புகாரளிக்கவும்  அவர்கள் மீது சட்ட  நடவடிக்கை எடுக்கவும்  உதவும் அமைப்பு தான் இது. 

இத்தகைய PCA-வை பரிந்துரைத்தது National Emergency-க்கு  பிறகு ஆட்சியை பிடித்த ஜனதா கட்சி National Emergency நேரங்களில் காவல்துறையினால் பாமர மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை கருத்தில்கொண்டு 👉  Mr.Dharma vira IAS  தலைமையில் 1977-இல் உருவாக்கப்பட்ட National Police Commission என்ற குழு. இந்த   குழு   முன்வைத்த  பல  பரிந்துரைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள்  ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் PCA போல இன்னொரு முக்கிய விஷியமென்பது  காவல்துறையானது, நீதி துறை மற்றும்  தேர்தல் ஆணையத்தை போன்று  தன்னாட்சி அமைப்பாக சட்டத்துக்கு உட்பட்டு  செயல்பட வேண்டும். அப்போதுதான் அரசியல் அழுத்தங்களுக்கு  உட்பட வேண்டிய அவசியம் காவலர்களுக்கு இருக்காது.

பிறகு சுழற்சி  முறையில் எட்டு  மணி நேரப்பணி, வார விடுமுறை,Civilian Policing System-மில் குறிப்பிட்டுள்ள ஆயுத பயன்பாடுக்கான கட்டுப்பாடுகள், நீதிமன்ற பணி, விசாரணை கைதிகளின் மனித உரிமை பாதுகாப்பு போன்றவைகளுக்கென  தனி பிரிவு, குற்ற புலனாய்வு மற்றும் பந்தோபஸ்து பணிகளில் இருந்து சட்ட ஒழுங்கு காவலர்களை பிரிப்பதன் மூலம் ஏற்படும் பணிச்சுமை குறைப்பு, இன்னும் இப்படி ஏராளமான பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

இந்த குழு அளித்த பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்வதற்காக 1996-ஆம் ஆண்டு பஞ்சாபில் DGP-யாக பணியாற்றி ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி Mr. Julio Francis Ribeiro IPS தலைமையில் Review Committee ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு NPC-யின் அறிக்கையை ஆய்வு செய்துவிட்டு மறுபரிசீலனைக்கு வேலை இல்லை என்று தெரிவித்தது. Mr. Julio Francis Ribeiro IPS அவர்களின் அறிக்கையின் சாராம்சம் இது தான்👇👇👇

               "Fear of law is most important than fear of police. Law should be respected by Law-makers, Law-implementing officers and the citizens. A Commissioner of police should shiver to commit any illegal action against a poorest of the poor person. Then only this country becomes a civilized country.

அதன் பின்னர் 2006-ஆம் ஆண்டு பிரகாஷ் சிங் வழக்கினை மேற்கோள் காட்டி உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களுக்கு பிறகு பல மாநிலங்களில் PCA அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரையில் (Tamil Nadu state Police Reforms Act-2013)-இன் படி 2019-ஆம் ஆண்டு PCA அமலுக்கு வந்தது.

இன்றளவிலும் இந்தியா முழுவதும் PCA அமலுக்கு வரவில்லை என்றாலும் பெருவாரியான மாநிலங்களில் இருக்கிறது. அதில் சிறப்பாக செயல்படும் மாநிலம் என்று பார்த்தால், நடைமுறை சிக்கல்களை கூடுமானவரை தவிர்த்து PCA-வின் பயன் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைய வழிவகுத்து சிறப்பாக செயல்படுவது பஞ்சாப் மாநிலம் என்பது (Bureau of Police Research and Development-BPRD)-இன் தகவலாக உள்ளது. மேலும் பஞ்சாப் மாநில மனித உரிமை ஆணையத்தின் தகவலின்படி 1997-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை 2,63,000 வழக்குகள் காவல்துறை அதிகாரிகளுக்கெதிராக PCA-வில் பதியப்பட்டுள்ளது. இதில் 1,44,000 வழக்குகள் தீர்க்கப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு தகுந்த இழப்பீடும், குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினருக்கு தக்க தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பல இடங்களில் நான் குறிப்பிட்டது போல இளைஞர்கள் காவல்துறைக்கு எதிராக வெறுப்பை மட்டுமே கொட்டுவதன் மூலம் பொது மக்களுக்கும் காவல்துறைக்கும் பெரும் இடைவெளி ஏற்படும். இந்த இடைவெளியானது குற்றங்களும் குற்றவாளிகளும் அதிகரிக்க வழி வகுக்கும்.மேலும் சமுக விரோத கொள்கை கொண்ட வன்முறை கூட்டத்தின் பலமும் உயரும்.இதில் கவனிக்க வேண்டியது படிக்காதவர்கள் மட்டுமில்லை சில நேரங்களில் படித்தவர்களும் அரசு பணியாளர்களும் கூட  சமூகவிரோதிகளாக மாறும் அபாயம் உண்டு. உதாரணமாக,  மத்திய பிரதேசத்தை சேர்ந்த பான் சிங் தோமர் என்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர் (இவர் 1958-ஆம் ஆண்டு இந்தியா சார்பாக ஆசிய தடகள விளையாட்டு போட்டியில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது) சிறு நிலத்தகராறு காரணமாக கொலை குற்றம் புரிந்துவிட்டு நம் ஊர் வீரப்பன் என்ற கூஸ் முனிஸ்சாமி போல தப்பித்து  காட்டுக்குள்ள சென்று பதுங்கிக்கொண்டு தனக்கான கூட்டத்தை உருவாக்கி கொண்டு கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபட தொடங்கி 1977-ஆம் ஆண்டு முதல் 1981-ஆம் ஆண்டு வரை மத்திய பிரதேச வனப்பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டார். பிறகு 1981-ஆம் ஆண்டு மத்திய பிரதேச காவல்துறையின் (SPECIAL TASK FORCE-STF)-இன் மூலம் சுட்டு கொல்லப்பட்டார்.இன்னும் இது போல பல உதாரணங்கள் இந்திய காவல்துறையின் வரலாற்றில் பொதிந்து கிடக்கின்றன.


அதனால் ஒவ்வொரு காவலரும் சீருடை அணிந்த பொதுஜனம் என்றும் ஒவ்வொரு பொதுஜனமும் சீருடை அணியாத காவலர் என்று திருச்சி மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி Mr.Kaliya moorthy IPS அவர்களின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, நாளைய சமூகத்தை நகர்த்தும் பொறுப்பில் உள்ள இளைஞர்கள் காவல்துறை மட்டுமில்லை எந்த அரசு துறையில் தவறு நடந்தாலும் வெறுப்பை மட்டுமே கொட்டி சம்மந்தப்பட்ட துறைக்கும் மக்களுக்கும் இடைவெளியை ஏற்படுத்தாமல் சட்ட விழிப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.மேலும் காலனியாதிக்க முறையில் இருந்து விலகி குடியரசு ஆட்சி முறைக்கு தகுந்தார் போல் காவல்துறைக்கான சீர்திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுவிட்டன. அவற்றை இனி வரும் காலங்களில் முறையாக  நடைமுறைப்படுத்தி காவல் துறை உங்கள் நண்பன் என்ற வாக்கியத்திற்கு அரசு உயிர் கொடுக்கும் என்ற நம்பிக்கையில்..............

                     -ஷங்கர் மோஹன்ராஜன்✍️🙏









கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கல்யாண சாவு

தீர்ந்த நீரும் தீராத் தாகமும்

நல்ல நேரம்