ஆசிரியர்கள் போராட்டம் - நியாயம் யார் பக்கம்???



       கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் நடந்து வரும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பொதுவாக தமிழகத்தில் நடக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து    அரசுக்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்து வந்தனர். ஆனால், மாறாக இப்போராட்டம் இளைஞர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும்பாலும் எதிர்ப்பையே பெற்றுள்ளது.  மிகவும் குறைந்த வருமானம் கொண்டுள்ள சாமானிய மக்களுக்கு இப்போராட்டம் எரிச்சலையே தருகிறது. இப்போராட்டத்தின் பிண்ணனி  மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் என்னவென்று காண்போம்.


போராட்டம் - காரணம் மற்றும் பிண்ணனி


    ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ ( JACTO GEO- Joint Action Council of Tamilnadu Teachers Organisation) அரசிடம் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுகின்றனர். அவற்றில் முக்கியமானவை, 
  • பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது
  • மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்
  • ஏழாவது ஊதியக் குழுவின் அறிவிப்பின் படி உயர்த்தப்பட்ட சம்பளத்தின் 21 மாத நிலுவைத்தொகையை வழங்குதல்

        முதலில் நாம் பழைய மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டங்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்களை அறிய வேண்டும்.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தின் படி, அரசு ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு அவர்களின் கடைசி மாத சம்பளத்தின் பாதியளவுத் தொகை ஓய்வுதியமாக மாதந்தோறும் வழங்கப்படும். இதில் ஓய்வூதியம் முழுவதும் அரசே அளித்தது.

  இத்திட்டத்தின் மூலம் அரசின் செலவு அதிகரித்ததால்  இத்திட்டத்தை மத்திய அரசு நீக்கிவிட்டு,  22.12.2003 அன்று புதிய ஓய்வூதியத் திட்டத்தை (New Pension Scheme) கொண்டு வந்தது. இத்திட்டம் 2009 ஆம் ஆண்டு முதல் தேசிய ஓய்வூதியத் திட்டமாக  (National Pension Scheme)  மாற்றப்பட்டது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், நாட்டிலுள்ள 18-60 வயதுக்குட்பட்ட யார் வேண்டுமானாலும் இதில் பயன்பெற முடியும்.

   தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு செலுத்த வேண்டும். (குறைந்த பட்சம் மாதம் ₹500) அதற்கு சமமான தொகையை அவர்களது ஓய்வூதியக் கணக்கில் அரசு செலுத்தும். அவர்கள் 60 வயதை எட்டியதும் கணக்கில் உள்ள மொத்தத் தொகையில் 60 சதவீதத் தொகை மொத்தமாக  (Maturity Settlement) வழங்கப்படும். மீதமுள்ள 40 சதவீத தொகையை பரஸ்பர நிதியில் (Mutual Fund) முதலீடு செய்து மாதந்தோறும் ஓய்வூதியமாக வழங்கப்படும்.

    பழைய ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருந்தது. அதாவது நாட்டின் மக்கள் தொகையில் வெறும் 11 சதவீதம். இந்நிலையில் தேசிய ஓய்வூதியத் திட்டம் மக்கள் அனைவரும் பயன்படும் வகையில் உள்ளது.

     இதன் மூலம் 1.1.2004 ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சேரும் அனைவருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் படி ஓய்வூதியங்கள் கிடைக்கும் என மத்திய அரசு அறிவித்தது. தமிழக அரசு 1.4.2003 முதல் பணியில் சேர்ந்த ஊழியர்கள் புதிய திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறுவார்கள் என அறிவித்தது.


அரசின் கருத்து

     
       தமிழக அரசின் செலவில் 60 முதல் 70 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் நிர்வாக செலவுகளுக்காக செலவு செய்யப்படுகிறது. மீதமுள்ள 30 முதல் 40 சதவீதத் தொகை மட்டுமே மக்களின் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. கடந்த நிதியாண்டில் தமிழகத்தில் செலவினத்தில் மொத்தம் ₹1,64,950 கோடிகளில் வெறும் ₹47851 கோடி மட்டுமே திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கொடுக்க பயன்படுத்தப்படுகிறது.

     தமிழக அரசு ஊழியர்கள் கிட்டத்தட்ட 12-13 லட்சம் பேர். அவர்களுக்காக அரசின் 60 சதவீத செலவு செய்யப்படுவதால் இதற்கு மேல் ஊதிய உயர்வு அளிக்கப்படுவது பொருளாதார ரீதியில் சாத்தியம் இல்லை.

   மேலும் 1.10.2017 முதல் ஏழாவது ஊதியக் குழுவின் அறிவிப்பின் படி சம்பளமானது 2.57 மடங்கு அதிகரித்துள்ளது. அடிப்படை ஊதியம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 2017-18 நிதியாண்டில் மட்டும் ₹21594 கோடி கூடுதலாக செலவாகியுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் ₹24000 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     மேலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக கையெழுத்து இட்டப் பிறகே அவர்கள் பணியில் அமர்ந்துள்ளதால், இப்போது இவ்வாறு போராடுவது ஏற்கத்தக்கது அல்ல என அரசு தெரிவிக்கிறது.


போராட்டக் காரர்களின் கருத்து


       புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் அரசு ஒவ்வொரு ஆண்டும் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்த தொகையானது பல்லாயிரம் கோடி ரூபாய் அரசிடம் உள்ளது. இந்நிலையில் அதற்கான ஒழுங்கான கணக்கு வழக்குகளை அரசு சரியாக பராமரிக்கவில்லை. தங்களின் பணம் என்னவானது என்ற அச்சம் அரசு ஊழியர்களிடம் உள்ளது. அத்தொகையின் கணக்குகளை தெரிவிக்க அரசு மறுக்கிறது.

     மேலும் ஏழாவது ஊதியக் குழுவின் ஊதிய உயர்வை தமிழக அரசு 1.10.2016 முதல் நடைமுறைப்படுத்தியது. இதன் மூலம் 1.1.2017 முதல் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.   ஆனால் ஆசிரியர்களுக்கு மேற்கூறிய 1.10.2017 முதல் தான் உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்பட்டது. 21 மாதங்களுக்கான நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை.  IAS, IPS, MLA போன்றவர்களுக்கு இத்தொகையானது வழங்கப்பட்ட நிலையில் தங்களுக்கு வழங்க மட்டும் அரசு பொருளாதார நிலையை காரணம் காட்டுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


யார் மீது தவறு


      பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் சூழலில் இப்போராட்டம் மாணவர்கள் இடையே பெரும் பாதிப்பை நிச்சயமாக ஏற்படுத்தும். JEE, NEET போன்ற போட்டித் தேர்வுகளில் அரசுப்பள்ளி மாணவர்களின் வெற்றி சதவீதம் மிகவும் குறைவாகவே உள்ளது. தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் கடுமையான பயிற்சிகள் அளித்து வரும் இச்சூழலில், அவர்களைவிட மூன்று மடங்கு அதிக சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவது சரியா? 

 பொறியியல் பட்டதாரிகள் லட்சக்கணக்கானோர் குறைந்த ஊதியத்தில் வேலைப்பார்த்து வருகின்றனர். இன்னும் தமிழகத்தில் வறுமை முழுமையாக ஒழிக்கப்படவில்லை. நாட்டின் செல்வமானது குறைந்த மக்கள் தொகையிடம் சேர்ந்துள்ளது. பெரும் தொழிலதிபர்கள் மற்றவர்கள் மீது கவலையின்றி வாழ்கின்றனர் என்று பலர் கூறுகின்றனர்.(கார்ப்பரேட் சதி!!!) அதேபோல் அதிக சம்பளம் வாங்கும் ஆசிரியர்களும் நலத்திட்டங்களால் பயனடையும் ஏழை மக்களை நினைத்துப் பார்க்க தவறுகிறார்களோ????

       கல்வி என்பது சேவைத் துறையைச் சேர்ந்தது. தன்னலம் மட்டுமே பாராது, பிறர் துன்பம் களையும் வகையில் கல்வி திகழ வேண்டும். அரசுப்பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆசிரியர்கள் இதுவரை போராட்டம் நடத்தியுள்ளனரா??? இந்த ஆசிரியர்களிடமிருந்து மாணவர்கள் பொதுநலத்தைக் கற்றுக்கொள்ள முடியுமா??? அரசுப்பள்ளி ஆசிரியர்களில் எத்தனை பேர் தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்துள்ளனர்??? தங்களது பாடம் நடத்தும் திறன் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லையோ???

      
      மேற்கூறிய கருத்துக்கள் மூலம் தவறு முழுவதும் ஆசிரியர்கள் மீது மட்டுமே என்று கூறிவிட முடியாது. சமூக வலைத்தளங்களில் கூட போராட்டத்தைக் கண்டித்து பல பதிவுகள் வருவதைக் காண முடிகிறது. ஆனால் பிரச்சனைகளுக்கான மூலக்காரணம் அரசிடமே உள்ளது. 
       
          வாக்கு வங்கி அரசியலும், நேர்த்தியற்ற நிதிக்கொள்கைகளுமே இதன் காரணங்கள். புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியதால் ஏற்பட்ட தேர்தல் தோல்வியை சரிகட்ட, அடுத்தடுத்த தேர்தல்    அறிக்கைளில்      செய்ய இயலா வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளைப் பெறுகின்றனர். அரசு ஊழியர்களை வாக்குகளாகப் பார்ப்பது தான் இப்பிரச்சனைக்கு மூல காரணம். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என்று பல பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகள் ஓய்வூதியம் வழங்கியே கஜானாவை காலி செய்த வரலாறும் உள்ளது.

     இலவசத் திட்டங்கள் வறுமை ஒழிப்புக்கு உதவினாலும் கூட, வாக்குகளைப் பெறுவதற்காக அனைவருக்கும் அவற்றை வழங்குவதாக அறிவித்து அவர்களின் வாக்குகளைப் பெற முயல்கின்றனர். இந்திய அளவில் இரண்டாவது அதிக வருமானம் கொண்ட தமிழகம் இன்று நான்கு லட்சம் கோடி கடனில் உள்ளது. இவ்வளவு நிதி நெருக்கடி உள்ள நிலையில் MLA-க்களின் சம்பளம் இரட்டிப்பாக உயர்த்தப்படுவது அவசியமா என்ற ஐயம் சாமானியனுக்கு எழுவது இயற்கை தான்!!!! தேர்தல் சமயங்களில் வெற்றி பெற அளிக்கப்படும் வெற்று வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சாத்தியமா என்ற ஆய்வினை மேற்கொண்ட பிறகே அவற்றை வெளியிட வேண்டும். நாமும் வெற்று வாக்குறுதிகளை உணர்வு மிகுதியுடன் நம்பிவிட கூடாது.

      ஆசிரியர்களைப் பணிநீக்கம் செய்வதும், தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதும் புதிய சிக்கல்களை உருவாக்குமேயன்றி நிரந்தரத் தீர்வைத் தராது. பேச்சுவார்த்தை நடத்துவது தான் தீர்வாக அமையும். ஆசிரியர்களும் அரசின் நிதிச் சூழலை புரிந்து கொள்ள வேண்டும்.


  "அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
     ஊதியமும் சூழ்ந்து செயல்'

குறள் எண் : 461

 பொருள்

     ஒரு செயலைத் தொடங்கும் முன், அதனால் அழிவதையும், அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராயந்து செய்ய வேண்டும்

கருத்துகள்

  1. போராட்டத்தில் ஈடுபட்டுலுள்ள ஒவ்வொரு ஆசிரியரும் படிக்க வேண்டிய பதிவு உன்னுடையது..
    மக்களுக்கு சமூக அக்கரையை ஏற்படுத்த வேண்டிய அவர்கள் இவ்வாறு செய்வது வருத்தம் அளிப்பதாக உள்ளது..
    அவர்கள் சரியாக தேர்தலை அணுகிருந்தால் இந்த போராட்டம் நடந்து இருக்காது..
    ஆசிரியர்கள் அரசின் தற்போதைய சூழலை புரிந்து கொண்டு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக வேலைக்கு செல்வதே சிறந்த ஒன்றாகும்...
    சாதாரண மக்கள் எவ்வாறு அரசிடம் இலவசங்களை எதிர்பார்த்து உள்ளார்களோ அது போல ஆசிரியர்களும் இவ்வாறு செய்தால் நாளைய சமுதாயம் மிக பெரிய பாதிப்புக்கு உள்ளாகும்..
    இவர்களுக்கு கிடைக்கும் ஊதியம் பொறியியல் படித்த இவர்கள் பிள்ளைகளுக்கு கிடைக்கிறதா என்று சற்று யோசித்து பார்த்து இவர்கள் செய்யும் போராட்டம் தேவைதானா என்று சிந்தித்து செயல் புரிதல் வேண்டும்..
    அதே சமயம் அரசு பேச்சு வார்த்தை மேற்கொண்டு நிதி சயமையை விளக்கி ஓய்வூதிய அம்சம் தவிர மற்ற அம்சங்களை செயல் படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்..
    " போதும் என்ற மனம்" அனைவரிடமும் வர வேண்டும்..

    பதிலளிநீக்கு
  2. உன் முதல் பத்தியிலே இளைஞர்களும், மக்ககளும் விழிப்புணர்வு பெற்று விட்டனர் என்பது உறுதிப்படுகிறது.. மகிழ்ச்சியும் அளிக்கிறது...

    இப்பதிவை படித்தவர் நிச்சயமாக பணிக்கு திரும்பி இருப்பர்...

    சர்ச்சைக்குரியவைகளை அறிந்து அதை ஆராய்ந்து எளிதாக விளக்கும் மற்றும் தீர்க்கும் ஆற்றல்கள் உன்னிடம் ஏராளம்..

    வாழ்த்துகள் நண்பா...
    வளர்க உனது புரிதல் தரும் வரிகள்..

    ஒருவனின் முன்னேற்றம் என்பது தாய், தந்தை, ஆசிரியர் ஆகியோரை வைத்தே அமைகின்றது எனலாம். அதனால்தான் நமது முன்னோர்கள்.

    "மாதா, பிதா, குரு, தெய்வம்"

    என்று பழமொழி வாயிலாக அவர்களின் சிறப்பை உணர்த்தினார்கள்.

    ஆனால் இன்றோ...

    தங்களின் தனி சிறப்பை தாமே சீர்குலைப்பதா..?

    விலைமதிப்பற்ற உங்கள் ஞானத்தை தர நீங்களே விலை கொடுப்பதா...?

    முன்னோர் வகுத்த நெறிமுறை அடுத்த தலைமுறை உணர்த்திடவும்
    பின்னோர் அதனை மறந்துவிடாமல் போற்றிக் காத்திடவும்
    வன்முறை என்பதை அறியாத் தலைமுறை உருவாக்கி வைத்திடவும்
    நன்முறை மட்டும் நாடும் இளைஞர்கள் நிறைந்து பெருகிடவும்
    ஏற்றம் பெற்றிட இதனை உணர்வது ஆசான் கடனாகும்.
    - டி.என்.முரளிதரன்.
    என்று எழுதியவனும் பள்ளி ஆசிரியர் தான்...

    "தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
    காமுறுவர் கற்றறிந் தார்".
    - குறள் 399

    பொருள்:
    தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட தான் விரும்புவார்கள் என்கிறார் வள்ளுவர்.
    பொய்யாமொழி என்றைக்கும் பொய்க்காது...
    சரி மேலும் பணம் தேவை என்றாலுமே,
    மேலும் கற்றிறுந்தாலே பணி உயர்வும் பெற்றிருப்பர்.
    ஆனால் அதை விடுத்து ஆர்பாட்டம் செய்வது ஏன்..?
    ஆகவே போராட்டக் குழுவின் மீது பலவித ஐயமும் எழுகின்றன(ஆசிரியர்கள் மீது அல்ல)...

    சேவை என்று சொல்லி செல்வம் சேர்க்கவே கல்லூரியை கட்டியும் ,தன் கடமையைச் செய்ய காசு கேட்கும் சில அரசியியல்வாதிகள் போல் அல்லாமல்...
    சிறந்து விளக்கவும்,அறவழி நடக்கவும்,ஞானத்தையும் அன்பையும் அள்ளி கொடுத்து வழிநடத்தும் அன்னை போல் ஆகுக.

    "அரசியல்வாதிகள் ஆசை வார்த்தைகளை அள்ளி தெளிக்க...
    அறியாமையால் நாமும் அவர்களை தேர்ந்தெடுக்க...
    துறையில் அறிவற்றவரை ஆள வைத்தோம்...
    துன்பங்கள் யாவும் நாம் பெற்றுவிட்டோம்.

    போதும்... போதும்... இனி,

    அனைத்து பணியும் சேவை என்போம்...
    ஆற்றும் பணியில் ஆர்வம் கொள்வோம்...
    என்றும் அயராது உழைத்தே உயர்வோம்..
    அனைத்தையும் ஆராய்ந்து அறிய முயல்வோம்..
    நல்லதோர் மாற்றம் நடந்திட செய்வோம்..
    ஆற்றல் மிகுந்தோரையே அத்துறையில் ஆள வைப்போம்..
    அவனியில் அன்பும், அறிவும், வளமும் பெற்று மகிழ்ந்திருப்போம்."

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கல்யாண சாவு

தீர்ந்த நீரும் தீராத் தாகமும்

நல்ல நேரம்