எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்



   

     இந்தியாவின் முக்கியமான சிறப்பம்சம் அதன் பன்முகத்தன்மை தான். சாதி, மதம், இனம், மொழி என்ற பலதரப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அதிகமாக பிரிவினைவாதம் தூண்டப்படுகிறது. சில அமைப்புகள் இத்தகைய வெறுப்புணர்வை மக்களிடையே திணித்து வருகின்றன. அரசியல் உள்நோக்குடன் இந்தியன் யார்? தமிழன் யார்? போன்ற மரபணு சோதனைகளில் ஈடுபடுகின்றனர்.  இந்த மண்ணின் மைந்தர்கள் யார்?

        ஆரியர்கள் முதல் ஆங்கிலேயர்கள் வரை பலரை ஈர்க்கும் வகையில் இந்தியா செல்வ செழிப்புடன் இருந்தது. அவர்கள் மூலம் இங்குள்ள மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்து, இஸ்லாம், கிருஸ்துவம் போன்ற மதங்கள் இவ்வாறு பரவின. சாதி கட்டமைப்புகளும் வலுப்பெற்றன. இந்நிலையில் இந்தியா யாருக்கு சொந்தம்? ஆதித்தமிழர் யார்? போன்ற வினாக்கள் எழுகின்றன.

மதவாதப் பிரிவினை


          மதரீதியாக நாட்டைப் பிரிக்க நினைக்கும் சிலர் இஸ்லாமியர்களை இந்தியர் அல்ல என வாதிடுகின்றனர். சுதந்திரத்தின் போது ஏற்பட்ட பிரிவினையில், இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்தான் என்ற தனிநாடு அமைந்தது. இருப்பினும் இங்கிருந்த இஸ்லாமியர்கள் தங்களது தேசமாக இந்தியாவையே தேர்ந்தெடுத்தனர். காரணம் இம்மண்ணின் மீது அவர்கள் கொண்ட பற்று.  இந்நிலையில் அவர்களை இந்தியர்கள் இல்லையென்றும், பாகிஸ்தானுக்கு போக சொல்வதும் தேவையற்ற பிரிவினைவாதம். உணவுப்பழக்கம் என்பது தனிப்பட்ட உரிமை. தான் என்ன உணவு உண்ண வேண்டும் என்று பிறர் முடிவு செய்வது மனித உரிமை மீறலின் உச்சம்.

     தீவிரவாதம் என்பது எந்தவொரு மதத்தையும் சார்ந்தது அல்ல. அனைத்து மதங்களும் அன்பு வழியை தான் போதிக்கின்றன. அனைத்து சமூகத்திலும் வன்முறையாளர்கள் சிலர் இருக்கின்றனர். அதற்காக அச்சமூகம் முழுமைக்கும் அவப்பெயர் சுமத்துவது காட்டுமிராண்டித்தனம்.


       தமிழக அரசியலில் முக்கியமான ஒன்று பார்ப்பனிய எதிர்ப்பு. அனைத்து சமூகத்தைப் போல இங்கும் சில புல்லுருவிகள் இருக்கலாம். ஆனால் அச்சமூகத்தையே வெறுப்பது தவறு. சாதிய ஒழிப்பு பற்றி கடுமையாக பேசிய பாரதியார் இச்சமூகத்தைச் சேர்ந்தவர் தான். தமிழகத்தில் முதல் கோவில் நுழைவு போராட்டம் நடத்தியவர் மதுரை வைத்தியநாத ஐயர்.

       இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இங்குள்ள அனைவருக்கும் தங்களது விருப்பமான மதத்தை பின்பற்றும் உரிமை உள்ளது. எந்த மதத்தையும் சாராமல் இறைமறுப்பாளராக இருப்பதும் அவரவர் விருப்பம்.  ஆனால் தனது உரிமைகள் அடுத்தவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும்.

இனவாதப் பிரிவினை


        இதேபோல் ஒரு வகை பிரிவினைவாதம் தமிழ்நாட்டிலும் அதிகரித்து வருகிறது. ஆங்கிலேய ஆட்சியில் சென்னை மாகாணம் தற்போதைய தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியிருந்தது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட சமயத்தில் இங்குள்ள பிறமொழி பேசும் மக்கள் தமிழ்நாட்டிலேயே தங்கிவிட்டனர். இந்நிலையில் அவர்கள் மீதான வெறுப்புணர்வு தேவையற்றது. அரசியலமைப்புச் சட்டத்தில் மொழிவாரி மாநிலங்கள் ஏற்படுத்தும் போதே, ஒரு மாநிலம் ஒரு மொழிக்கு மட்டுமல்ல ( Not one language for one state) என்று அறிவிக்கப்பட்டது.

       வந்தேறிகள்,  பிழைக்க வந்தவர்கள் என்று அவர்களை வசைபாடுவதும், அவர்களை தாம் தான் வாழ வைத்ததாகவும் கூறுகின்றனர். அனைவரும் தத்தமது கடின உழைப்பால் உயர்கின்றனர். இன்றும் இங்கு குடும்பங்களைப் பிரிந்து வீடற்று வீதிகளில் உறங்கும் வடமாநில கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாடுகளில் பணிபுரியும் நம் சொந்தங்களை எண்ணிப் பார்த்தால், இவர்கள் மீதான வெறுப்புணர்வு குறையலாம்.

       சுந்தர் பிச்சை அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளார். இன்னும் பல தமிழர்கள் உலகின் பல நாடுகளில் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர்.  நம் தேசத்தின் பிற மாநில மக்கள் வந்தேறிகள் என்றால், தமிழர்கள் பிற நாடுகளில் வந்தேறிகள் தானே? உண்மையில் இவ்வுலகிற்கு நாம் அனைவருமே வந்தேறிகள் தான்.
 
       இங்குள்ள சாதிய ஒடுக்குமுறைகளைக் களைய அனைவரும் 'தமிழர்' என்ற முறையில் இணைய வேண்டும் என்று கூறும் இவர்கள், சாதியை வைத்து தான் அவர் தமிழரா இல்லையா என்று முடிவு செய்கிறார்கள். சாதியைப் பொறுத்தே அவர் தெலுங்கரா, மலையாளியா என்று முடிவு செய்கிறார்கள். (சாதிகளைக் குறிப்பிட விரும்பவில்லை)
     
         இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் தமிழர்கள் அல்ல என்று சிலரைக் கூறுவதிலும் ஓர் இரட்டைத் தன்மை உள்ளது. வரலாற்றில் சிறந்து விளங்கியவர்களிடம் இவர்கள் இப்பிரிவினையை புகுத்துவதில்லை. ஏனெனில் தமிழனே சிறந்தவன் என்று மார்தட்டிக் கொள்ளத்தான்.

  உதாரணமாக பல்லவ மன்னர்கள் தற்போதைய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பல்லவ மரபு "போதிதர்மன்' இவர்களுக்கு தமிழர்.  உலகின் மிகப்பெரிய கோவிலான  "அங்கோர் வாட்டைக்" கட்டிய "சூர்யவர்ம பல்லவன்" இவர்களுக்கு தமிழன். மாமல்லபுரம் மற்றும் தமிழகத்தில் உள்ள பல கோவில்களை நிறுவிய மற்ற பல்லவ மன்னர்கள் இவர்களுக்கு தமிழர்கள்.
தெலுங்கு பேசும் சமூகத்தைச் சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் பூலித்தேவன் இவர்களுக்கு தமிழர்கள். ஆனால் இன்று வாழும் மக்கள் "வந்தேறிகள்"!!!!

      ஏனிந்த வெறுப்புணர்வுகள்? தங்களது அரசியல் தேவைகளுக்காக சிலர் சாதி, மதம், இனம், மொழி ஆகிய உணர்வுகளைத் தூண்டி விடுகின்றனர். அதற்கு நாம் உள்ளாகக் கூடாது.


சாதியப் பிரிவினை


  சாதிய ரீதியான தீண்டாமைக் கொடுமைகளும் இன்னும் பல இடங்களில் காணப்படுகிறது. சில அரசுப் பள்ளிகளில் சத்துணவு ஊழியர்கள் குறிப்பிட்ட சாதியினராக இருந்ததால் அவர்களை சமைக்க அனுமதிக்காத அவலமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இருபத்தி ஒன்றாவது நூற்றாண்டிலும் சாதிக்காக சொந்த மகளைக் கொல்லும் கொடுமையும் குறையவில்லை.

       சாதிய உணர்வுகளைத் தூண்டி இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் அமைப்புகள் அனைத்து சாதியிலும் உள்ளன. சமீபத்தில் அம்பேத்கர் நினைவு நாளில், ஒரு இளைஞன் குறிப்பிட்ட சாதி பெண்களைத் திருமணம் செய்ய வேண்டும் என்பது போன்ற வாசகங்களைக் கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் ரீதியாக வாக்கு வங்கிகளைக் குறிவைத்து இது போன்ற செயல்கள் நடைபெறுகின்றன.


            வாக்கு வங்கி அரசியலின் மற்றுமொரு அவல நிலை, ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் பின்புலம் அறிந்த பின்னரே அது பற்றிய எதிர்வினையை அரசியல் தலைவர்கள் ஆற்றுகின்றனர். தலித் இளைஞர்கள் ஆணவக் கொலை செய்யப்படும் போது கொதித்தெழும் தலைவர்கள், சமீபத்தில் ஒருதலைக் காதலால் மாற்று சாதி பெண்ணைக் கொலை செய்த தலித் இளைஞனுக்கு சிறு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. காரணம், இங்கு கொலை செய்தவனைக் குற்றவாளியாக பார்க்காமல் ஒரு சமூகத்தின் வாக்குகளாக பார்ப்பதுதான்.

மனிதம் தழைக்கட்டும்


     ஒருவரது பிறந்த சாதி, பின்பற்றும் மதம், தாய்மொழி ஆகியன ஒருவகை அடையாளமேயன்றி தகுதியல்ல. பிறப்பால் அனைவரும் சமம். வாழும் காலத்தில் நாம் செய்யும் செயல்கள் மூலமே உயர்வு தாழ்வு அளவிடப்பட வேண்டும்.

     சாதி, மதம், இனம் ஆகியன நாம் அணியும் சட்டையின் நிறம் போன்றவை. ஒரே நிறத்தில் சட்டை அணிந்தவர்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, தீயவன் ஒருவனை அச்சமூகத்தின் பிரதிநிதியாக்கி அச்சமூகம் முழுமைக்கும் அவப்பெயர் சுமத்த வேண்டாம்.

           சாதியம், மதவெறி, இனவாதம் ஆகியன நீங்கி, சக மனிதனை மனிதனாக பார்க்கும் மனநிலை ஓங்க வேண்டும். இங்குள்ள அனைவர் மீதும் அன்பு செலுத்தாவிடினும், வெறுப்புணர்வை உமிழாமல் இருக்க வேண்டும்.
     ஏனெனில்,

"எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்"!!!

x

கருத்துகள்

  1. "உடையின் நிறம் வேறுதான் - அதன்
    உள்ளிருக்கும் உயிர் ஒன்றுதான்.

    வேறுபட்டது வண்ணங்கள் இல்லை - நம்
    உள்ளதின் எண்ணங்கள் தான்.

    ஆகவே,

    உயிரினுள் இருக்கும் உள்ளம் - அதை
    உணர்ந்தால் மனிதம் ஓங்கும்".

    என்பதை உணர்த்தும் உன் உரைநடையும், ஒற்றுமையை ஒலிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் மிகவும் அருமை..

    வாழ்த்துகள் நண்பா...

    பதிலளிநீக்கு
  2. அரசியல் உள்நோக்குடன் செயல்படும் தலைவர்களின் பேச்சில் குழம்பி கிடக்கும் இளைஞ்சர்களுக்கு இந்த பதிவு ஒரு கணம் அவர்களை யோசிக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.
    உன் எழுத்தும் அதன் சமூக நோக்கமும் தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  3. New info da...pallavas are telugu peoples.... Shocking....very good keeppp doing...all the best

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கல்யாண சாவு

தீர்ந்த நீரும் தீராத் தாகமும்

நல்ல நேரம்