கஜா - கற்றுத்தந்தது என்ன????

         
   


    கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் நிலைகுலைந்து போயுள்ளது. தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் டெல்டா மாவட்ட மக்கள், மற்றவர்கள் தரும் உணவுப் பொட்டலங்களுக்காகக் கையேந்திக் காத்திருக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

     இங்கு ஏராளமான மக்கள் வீடுகள் மற்றும் கால்நடைகளை இழந்துள்ளனர். குறிப்பாக இங்குள்ள மக்களின் முக்கிய சொத்தாக இருந்த தென்னை மரங்கள் லட்சக்கணக்கில் அழிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான நிவாரணப் பணிகளில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். அரசும் தன்னால் முடிந்தவரை பணிகளை முடுக்கி விடுகிறது. 

        பல மாவட்டங்களில் இருந்தும் அரசு ஊழியர்கள் குறிப்பாக மின்துறை ஊழியர்கள் இரவு பகல் பாராது உயிரைப் பணயம் வைத்து பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் முழுமையாக மின்னிணைப்பு வழங்கிட பல நாட்களாகின. நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க துப்புரவுப் பணியாளர்களும் கடுமையாக உழைத்தனர்.  இன்றளவும் ஈடுகட்ட முடியாத அளவுக்கு சேதங்கள் இருப்பினும், நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட அனைவரையும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

       முகம் தெரியாத பல நல்ல உள்ளம் கொண்டவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை நிதியுதவியாகவும் நிவாரணப் பொருட்களாகவும் அளித்தனர்.  அரசினை மட்டும் எதிர்பாராமல் பல தொண்டு நிறுவனங்களும் உதவிகளைச் செய்தனர்.

        இதற்கு முன்னர் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது கிடைக்கப்பெற்ற நிவாரணங்கள் அளவுக்கு டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரணங்கள் கிடைக்கவில்லை என்று ஒருபுறம் குற்றச்சாட்டுகளும் எழாமல் இல்லை. குறைகள் இல்லாமல் எந்த செயலும் இல்லை. வெற்றுக் குற்றச்சாட்டுகள் மட்டும் எறியாமல் அதற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும்.

         சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கின்ற உள்கட்டமைப்பு வசதிகள் டெல்டா மாவட்டங்களில் இல்லை. இங்குள்ளவை பெரும்பாலும் சிறு குறு கிராமங்கள். இங்குள்ள மாவட்டங்களை இணைக்கும் பிரதான சாலைகளே மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அவ்வாறிருக்க கிராமப் புறங்களின் நிலை இன்னும் மோசம். இம்மாவட்டங்களுக்கு பேருந்தில் பயணிப்பவர்கள் அனைவரும் இந்த வேதனையை அறிவார்கள். மோசமான சாலை வசதிகளே நிவாரணப் பணிகளில் ஏற்பட்ட தடைகளுக்கு முக்கிய காரணம்.

      சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை அமைப்பதற்காக எழுந்துள்ள எதிர்ப்புகள் நாம் அறிந்தவையே. இது போன்ற வளர்ச்சித் திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பு அதிகரித்து, மக்கள் வாழ்வாதாரம் முன்னேறும் என்பதால் அரசு இத்திட்டத்தை ஆதரிக்கிறது. அரசின் கருத்து ஏற்கத்தக்கது.  இருப்பினும் நாட்டின் முதுகெலும்பான கிராமங்களை இணைக்கும் சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகளை அரசு மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் கூட வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். தமிழகம் என்பது சென்னை மட்டுமல்ல. பல சிறிய கிராமங்களை உள்ளடக்கியது தான் தமிழகம்.

         அனைவரும் உணர வேண்டிய மற்றொரு உண்மை, இங்கு ஏற்பட்ட இயற்கைச் சீரழிவானது குறிப்பிட்ட சாதி, மதம், இனம், மொழி சார்ந்தவர்களைக் குறிவைத்து தாக்கவில்லை. அதேபோல் அதிக செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர்கள் கூட தங்கள் உடமைகளை இழந்துள்ளனர். நம்மால் கட்டுப்படுத்த முடியாத, நம்மைத் தாண்டிய ஒரு ஆற்றல் இங்குள்ளது. அதனை சிலர் இயற்கை எனலாம், சிலர் இறைவன் எனலாம். அதன் முன் நம் அனைவரும் சமமே.

     நிவாரண உதவிகளை வழங்கியவர்களும் மற்றவர்களின் சாதி, மதம், இனம் ஆகியவற்றைக் கொண்டு உதவி செய்யவில்லை. இயற்கையின் படைப்பில் அனைத்து உயிர்களும் சமமே. எனவே நாம் வாழும் இந்த குறுகிய காலத்தில் மற்றவர்களின் மீது வெறுப்பை செலுத்தாமல் அன்பு செலுத்தி வாழ்வோம். இயற்கையின் சமநிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், இயற்கை தன்னைத் தானே சரிசெய்து கொள்கிறது. மக்களிடையே இயற்கை சீரழிவுகளின் போது ஏற்படும் ஒற்றுமையும், மனித நேயமும் வெளிப்படுகிறது. அவை எப்போதும் இருந்தால் இவ்வுலகமே சொர்க்க பூமியாகும். மனிதம் வளர்ப்போம்.


        

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கல்யாண சாவு

தீர்ந்த நீரும் தீராத் தாகமும்

நல்ல நேரம்