வீழ்வே னென்று நினைத்தாயோ????

   

     தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துள்ள இக்காலத்தில் உலக நடப்புகளையும் பொது அறிவுகளையும் விரல்களுக்கு இடையில் தெரிந்துகொள்ளும் பேறு பெற்றுள்ள நாம், தமிழன் என்ற பெருமையோடு படிக்க வேண்டிய நம் முன்னோர்கள் பலர் உள்ளனர்.

      தன் வாழ்நாள் முழுவதும் "அச்சம் தவிர்த்து, ஆண்மைத் தவறாமல், ஏறு போல் நடந்து, கேட்டிலும் துணிந்து நின்று, சிதையாத நெஞ்சம் கொண்டு, சுமைகளுக்கு இளைத்திடாமல், செய்வது துணிந்து செய்து, சொல்வது தெளிந்து சொல்லி, தாழ்ந்து நடவாமல், தோல்வியில் கலங்காமல், நீதி நூல் பயின்று, நேர்படப் பேசி, பாட்டினில் அன்பு செய்து, பணத்தினைப் பெருக்காமல், வருவதை மகிழ்ந்துண்டு, வேதம் புதுமை செய்து, வையத் தலைமை கொள்ள" விரும்பினாரே ஒருவர், அவரைப் பற்றி படிக்க வேண்டியது தமிழனாக நம் அனைவரின் கடமை. 
         
      முறுக்கு மீசையும் நெற்றித் திலகமும் தலைப் பாகையும் கூரிய விழிகளும் கொண்ட இவரது முகத்தைப் பார்க்கும் போது, நம்மை அறியாமலே ஓர் ஈர்ப்பு இவர் மீது வரும். அவர் யார்? தான் யார் என்பதை தனது குறுகிய கால வாழ்க்கையில் ஏராளமான தனது படைப்புகள் மூலம் அறியச் செய்து, அமரராகிப் போன அவர்தான் "பாரதியார்".

        தனது பாடல்கள் மற்றும் கட்டுரைகள் மூலம் தமிழின் பெருமை, விடுதலை வேட்கை, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு பொதுவுடைமை, தேசப்பற்று ஆகியக் கருத்துக்களை மக்களிடையே கொண்டு செல்ல முயன்றார் பாரதி. பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் கூறிய கருத்துக்கள் இன்றளவும் நமக்கு பயன்படும் வகையில் முற்போக்குத் தன்மையுடையனவாக உள்ளன. குறிப்பாக இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒருவர் பாரதியார்.

பாரதியெனும் தமிழ்ப் பற்றாளன்

   
      தமிழ் மொழியின் உயர்வை சிறுவயதிலேயே உணர்ந்த பாரதி, இறுதிவரை தமிழ் மொழியை உயிராக நேசித்தார்.

    " யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதா வதெங்குங் காணோம்"

என்று பாடிய பாரதி, பல மொழிகளைக் கற்றறிந்தவர் ஆவார். தற்காலத்தில் மொழிப்பற்று என்ற பெயரில் உள்ளவர்கள் போலல்லாமல், அவர் பல மொழிகளையும் கற்ற பின்பு தான், தமிழைச் சிறந்ததென்றார்.  மொழியுணர்வு என்பது தனது மொழியை மட்டுமே உயர்த்திப் பிடித்து மற்ற மொழிகளை வெறுப்பதல்ல என்பது பாரதியிடமிருந்து நம்மில் பலர் கற்கவேண்டிய ஒன்று. மேலும் தமிழர்கள் பிற மொழிகளைக் கற்று அவற்றிலுள்ள நூல்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

     "தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்"

என்ற இவரது வரிகள் "தமிழ் மொழியின் சுவையை அறிந்தவன் உருவாக்கும் படைப்புகள் மூலம், அவன் இறப்பினும் அவனது படைப்புகளால் அமர வாழ்வு கொள்வான்" என்று உணர்த்துகின்றன.

பாரதியெனும் தேசப்பற்றாளன்


        தமிழை நேசித்த பாரதி அதற்கு சற்றும் குறையாமல் நமது தேசத்தின் மீதும் பற்றுக் கொண்டிருந்தார். தமிழன் என்றாலே மற்ற மாநிலத்தவர்களையும் மற்ற மொழிகளையும் வெறுக்க வேண்டும் என்பது போன்ற மாய பிம்பம் தற்போது அதிகரித்து வருகிறது. ஆனால் அவர் தமிழும் தேசியமும் தனது இரு கண்களாக எண்ணினார்.

"முப்பது கோடி முகமுடையாள் - உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் - இவள்
செப்பு மொழி பதினெட்டுடையாள், எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்"

என்ற இவரது வரிகள் இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை உணர்த்துகின்றன. 

 "காக்கைக் குருவி யெங்கள் சாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்குந் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை"

என்ற இவரது வரிகள் இங்குள்ள உயிர்களனைத்தும் உறவென்றும், இங்குள்ள வளங்கள் அனைவருக்கும் சொந்தமென்றும் வலியுறுத்துகின்றன.


"எப்பதம் வாய்த்திடுமேனும் நம்மில்
யாவர்க்கும் அந்த நிலை பொதுவாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடியும் வீழ்வோம்"


இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் என்பது, சாதி, மதம், இனம், மொழி கடந்து இந்தியர் என்ற உணர்வால் கிடைத்தது. ஆனால் இன்றைய சூழலில் பல்வேறு பிரிவினைகளால் பிளவுண்டுக் கிடக்கும் நாம் பாரதியின் இவ்வரிகளை கட்டாயம் உணரவேண்டும்.

பொதுவுடைமை மற்றும் சாதிய எதிர்ப்பு


           அடிமைப்பட்டுக் கிடந்த மக்களிடையே தேசப்பற்றை உருவாக்க சாதிகளால் பிரிந்து கிடந்த மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியை தன் கவிதைகள் மூலம் செய்தார் பாரதி. சாதிய அடக்குமுறைகளைக் கண்டு கொதித்தெழுந்தார்.


"சாதிக் கொடுமைகள் வேண்டாம்; அன்பு
தன்னில் செழித்திடும் வையம்
ஆதரவுற்றிங்கு வாழ்வோம் - தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்"
        

 தான் பிறந்த சாதி, மதம், மொழி ஆகியவற்றால் உயர்வு, தாழ்வு கொள்ளுதல் கூடாது; வாழ்வியல் நெறிகளே ஒருவனது உயர்வினை நிர்ணயிக்கின்றன என்றார் பாரதியார்.


"சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லிய சொல் அமுதென்போம்
நீதிநெறி யினின்று பிறரக்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்"


      அதேபோல் இவர் எந்த தொழிலையும் உயர்ந்தது தாழ்ந்தது என்று கருதவில்லை. அந்தந்த தொழில்களில் நிபுணத்துவம் பெறுவதே முக்கியம் என்றார்.

"சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்
சந்தித் தெருப்பெருக்கும் சாத்திரங் கற்போம்"


         இவ்வரிகளில் விண்வெளி அறிவியல் மற்றும் துப்புரவுத் தொழில் ஆகிய இரண்டுமே சமம் என்கிறார். 

        ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவன் சாதி எதிர்ப்பு பேசுவது இயல்பான ஒன்று. ஆனால், மற்றவர்களை ஒடுக்கிக் கொண்டிருந்த சமூகத்தைச் சார்ந்த ஒருவர் முற்போக்குத் தனமாக இருந்தது வியப்புக்குரியது. ஆனால் இன்றளவும் இவருக்கான அங்கீகாரம் முழுமையாக கிடைக்கப் பெறவில்லை.

கனவு மெய்ப்பட வேண்டும்


          இன்று பெண்ணியம் பேசும் பலருக்கு முன்னோடியாக இருந்தவர் பாரதியார். பெண் கல்வியை கடுமையாக வலியுறுத்திய இவர், பெண்களை உயிரினும் மேலாகக் கருதினார்.


"உயிரைக் காத்திடும், உயிரினைச் சேர்த்திடும்
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா"
    

        இன்று இவர் கூறிய பெண்ணியத்தை தவறாகப் புரிந்து கொண்டு சிலர், ஆண்கள் செய்யும் தவறுகளைத் தாமும் செய்கின்றனர். "கற்பினை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்" என்ற பாரதி கூறும் பெண்ணியம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையேயான அதிகாரப் போட்டி அல்ல. 


"காதலன் ஒருவனைக் கைப்பிடித்தே, அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி
!"


      இன்று பலராலும் வலியுறுத்தப்படும் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லைகளுக்கு எதிரான தற்காப்புகளையும் இவர் பாடியுள்ளார்.


"பாதகஞ் செய்வோரைக் கண்டால் - நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா!மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா
!" 


         இன்று இளைஞர்கள் பலர் குறிப்பாக சமூக வலைதளங்களில் தமிழ் மொழியை பிற மொழியினரை இழித்து பேசவும், தமிழன் என்ற பெருமை பேசும் பொருளாகவும் மட்டுமே பயன்படுத்துகிறோம். தமிழின் இலக்கியங்களை படிப்பதன் மூலம் தான் தமிழ் வளர்ச்சியடையும்.

"நெஞ்சுப் பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்

சாத்திரங்கள் ஒன்றுங் காணார் - பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றாயிருந்தாலும் - ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத் திகழ்வார்"

        
 தமிழனென எண்ணும் ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒருவர் பாரதியார். திருவள்ளுவரைப் போல இவரும் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என அனைவருக்குமான ஒருவர்.  அவரது மீசைக்காக மட்டுமே அவரை விரும்பும் நாம் அவரது படைப்புகளை ருசித்தால் அவர் மீதான காதல் அதிகமாகும். நாம் பாரதியைக் கொண்டாடும் போது, தமிழ் தன்னைத் தானே கொண்டாடிக் கொள்கிறது.

"வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்

வாழிய பாரத மணித்திருநாடு"

கருத்துகள்


  1. நம்மில் பலரும் உலக மொழிகளுள் மூத்ததும் முன்னோடியுமான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று, பழமையானது, தொண்மையானது, இனிமையானது என்றும் பிறர் சொல்ல கேட்டு தான் பெருமைப்பட்டுக் கொண்டு இருக்கின்றோமே தவிர..

    எத்தனை பேருக்கு இங்கு தமிழ் நன்கு தெரியும்...?
    என்றேனும் இலக்கியம் படித்து அதன் முழு அர்த்தம் அறிந்தோமா...?

    நம் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையுமே நம் முன்னோர்கள் காவியமாகவும், கவிதையாகவும்,கட்டுரைகளாகவும் நமக்கு சொத்தாக கொடுத்துள்ளனர்.
    அதை பயன்படுத்தவும் இல்லை,பாதுகாக்கவும் இல்லை....

    என்பதை உணர்த்தும் உனது இந்த பதிவு நம்மில் பலருக்கு தமிழ் மொழியின் முன்னேற்றம் எது என்று விழிப்புணர்வை தரும் என்பதில் நம்பிக்கை எழுகின்றது.

    வாழ்த்துகள் நண்பா..
    வளர்க உனது விழிப்புணர்வு வரிகள்....

    "தமிழுடன் தனிமையில் இருந்து பாருங்கள்...
    அவை தரும் அமுதத்தை அள்ளி பருகிப்பாருங்கள்...
    இலக்கியத்தின் வரிகளை வாசித்து பாருங்கள்...
    அதன் இனிமையில் கொஞ்சம் இளைப்பாருங்கள்...
    கவிதைகளின் சொற்களை சுவைத்து பாருங்கள்...
    அந்த கனியின் ருசியில் தொலைந்து பாருங்கள்...

    அதில்..,
    அனுபவ அலைகள் அதிகம்..

    அவை..,
    அறிவுரை நன்கு வழங்கி செல்லும்..
    அன்பை மனதில் விதைத்து செல்லும்..
    நீதியை நெஞ்சில் நாட்டிச் செல்லும்..
    தர்மத்தின் வழியே கொண்டு செல்லும்..
    உன்னுள் உறுதியை கொடுத்து செல்லும்..
    உன்னை உயர்வுக்கு எடுத்து செல்லும்..."

    பதிலளிநீக்கு
  2. தெளிவான பதிவு.. இன்றைய இளைஞர்கள் தங்கள் அறியாமையை களைந்திட உன்னுடைய இந்த பதிவு இருக்கும்..
    பாரதியார் பற்றிய உன்னுடைய அத்தனை எழுத்துக்களும் அவர் போன்று விவேகம் நிறைந்துள்ளது..
    தமிழும் இந்தியமும் நம் இரு விழிகள் என்று அறிந்து அவைகளை போற்றிட வேண்டும்..
    அறியாமையை களைந்திடும் உன்னுடைய எழுத்துக்கள் தொடரட்டும்...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கல்யாண சாவு

தீர்ந்த நீரும் தீராத் தாகமும்

நல்ல நேரம்