நாகப்பட்டினம் - சீற்றங்களும் சிறப்புகளும்



     கஜா புயலின் கோர தாண்டவத்தால் பெரும் அழிவிற்கு உண்டான தமிழக டெல்டா மாவட்டங்களில் முக்கியமான ஒன்று நாகப்பட்டினம் மாவட்டம். இயற்கை சீற்றங்களின் பிடியில் சிக்குவது நாகை மாவட்டத்திற்கு இது புதிதல்ல. ஒவ்வொரு ஆண்டும் அழிவை எதிர்பார்த்து காத்திருப்பது இம்மாவட்ட மக்களின் விதி. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலைக்குப் பிறகு, கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
           உண்மையில் இயற்கை சீற்றங்களுக்கும், அழிவுகளுக்கும் மட்டுமே உரித்தான மாவட்டமா நாகப்பட்டினம்?


நாகப்பட்டினம் - பண்டைை வரலாறு

      நாகை மாவட்டம் நீண்ட நெடிய வரலாற்று சிறப்பு உடையது. பண்டைய தமிழ் மன்னர்கள் ஆட்சியிலும், ஆங்கிலேய ஆட்சியிலும் முக்கிய பங்கு வகித்தது. சங்க காலம் தொட்டே, அயல்நாட்டு தொடர்பு கொண்ட நகரம் நாகப்பட்டினம்.
          இலங்கையில் இருந்து வந்து குடிபுகுந்த ''நாகர்" இன மக்கள் வாழ்ந்த பகுதியை குறிப்பிட்ட பெயரே 'நாகப்பட்டினம்'. 
(பட்டினம்- கடற்கரை நகரம்)
 நாகலிங்க மலர்கள் அதிகம் மலர்ந்ததால், இப்பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
 முதலாம் குலோத்துங்க சோழன் நாகப்பட்டினத்தை "சோழகுல வள்ளிப்பட்டினம்" என்று குறிப்பிட்டார்.

வெளிநாட்டு தொடர்புகளும் வணிகமும்

   

     கீழத் தஞ்சை என்று அழைக்கப்பட்ட இன்றைய நாகப்பட்டினம், பண்டைய காலத்தில் இருந்து தமிழகத்தின் முக்கிய துறைமுக நகரமாக விளங்குகிறது. குறிப்பாக கடல்வழி வணிகத்தில் சிறந்து விளங்கிய சோழப் பேரரசின் முதன்மை துறைமுகம் நாகப்பட்டினம். இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா போன்ற பல நாடுகளுக்கு இதன் மூலம் தான் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

     சோழப் பேரரசின் தலைமை துறைமுகமாக விளங்கியது 'காவிரிப்பூம்பட்டினம்' எனப்படும் தற்போதைய 'பூம்புகார்'. காவிரி ஆறு கடலில் கலக்கும் இடம் தான் இந்த பூம்புகார். ( "புகும் ஆறு" என்ற பெயர் காலப்போக்கில் திரிந்து பூம்புகார் ஆனது)

       இன்றைய தமிழக வரைபடத்தில், இரண்டு இடங்களில் உள்ள ஒரே மாவட்டம் நாகப்பட்டினம். இதற்கான வரலாறு சுமார் 500 ஆண்டுகள் பழமையானது. 

  • இந்தியாவிற்கு முதலில் வந்த ஐரோப்பிய வணிகர்களான போர்ச்சுக்கீசியர்கள், நாகப்பட்டினத்தில் வணிகம் செய்யும் உரிமையை சேவப்ப நாயக்கரிடம் இருந்து பெற்றார். இதுவே பின்னாளில் இவர்களின் தலைமை இடமாக மாறியது.
  • அடுத்து வந்த டச்சுக்காரர்களின்  வணிக தலைமை இடமாக மாறியது.
  • ஆங்கிலேய, டச்சுக்காரர்களுக்கு இடையே, நாகப்பட்டினத்தை கைப்பற்ற ஏற்பட்டப் போட்டியில் ஆங்கிலேயர்கள் வென்றனர். சென்னை மாகாணத்தின் முக்கிய துறைமுகமாக நாகப்பட்டினம் விளங்கியது.
  • அடுத்து வந்த டேனியர்கள், நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியில் டேனிஷ் கோட்டையைக் கட்டினர்.
  • கடைசியாக வந்த பிரெஞ்சுக் காரர்களுக்கும் நாகப்பட்டினத்தின் மீது ஆர்வம் இருந்தது. இங்குள்ள காரைக்கால் பகுதியைக் அவர்கள் கைப்பற்றினர்.
   இவ்வாறாக அனைத்து ஐரோப்பிய நாட்டு வணிகர்களுக்கும் கனவாக இருந்தது நாகப்பட்டினம். கடைசி வரை பிரெஞ்சுக் காரர்களிடம் இருந்த காரைக்கால் யூனியன் பிரதேசமாக உள்ளதால், வரைபடத்தில் நாகப்பட்டினம் இரண்டு இடங்களில் காணப்படுகிறது.

சமய நல்லிணக்க மாவட்டம்


           

     நாகப்பட்டினம் மாவட்டத்தின் முக்கியமான சிறப்பம்சம், பல சமயங்களைச் சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்வதே ஆகும். பல நூற்றாண்டுகளாக பலதரப்பட்ட மக்களின் வருகையால், பன்முகத்தன்மை கொண்ட நகரமாகவும் சகிப்புத்தன்மை கொண்டும் விளங்குகிறது. சைவம், வைணவம், இஸ்லாம், கிருஸ்துவம், புத்தம் போன்ற சமயங்களின் புனிதத் தலங்கள் இங்குள்ளன. இவை அனைத்து மதங்களுக்கும் பொதுவானதான சுற்றுலாத் தலங்களாகவும் உள்ளன என்பது தனிச்சிறப்பு.



  • நாகப்பட்டினத்தில் உள்ள காயாரோகண சுவாமிகள் திருத்தலம், கிபி ஏழாம் நூற்றாண்டில் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டப்பட்டது. சிறந்த சிற்ப வேலைப்பாடுகளும் ஓவியங்களும் இங்கு நிறைந்து காணப்படுகின்றன.   நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனாரின் நினைவாக ஆண்டுதோறும் மீனவ சமூகத்தால் இங்கு 'தங்க மீன்பிடித்தல்' திருவிழா நடைபெறும். இக்கோயில் அப்பர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடப்பெற்ற தலமாகும்.
  • நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான செளந்திரராஜப் பெருமாள் திருத்தலம் இங்குள்ளது.
  • தமிழ்க்கடவுள் முருகன் சூரனை அழிக்க வேல் வாங்கிய இடமான சிக்கல் இங்குள்ளது.
  • 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நாகூர் தர்கா இஸ்லாமியர்களின் புனிதத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. இது இந்து-இஸ்லாம் ஒற்றுமையை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டுதோறும் நடைபெறும் 14 நாட்கள் 'கந்தூரி விழா' ஒற்றுமை, ஈகை, மத நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு அடையாளமாக உள்ளது
  • 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வேளாங்கண்ணி மாதா கோயில் உலகப்புகழ் பெற்ற புனிதத் தலமாகவும் சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.
  • இராஜராஜ சோழன் உதவியுடன்  இங்கு சூடாமணி விகாரம் என்ற புத்த விகாரம் கட்டப்பட்டது.

   இந்தியா முழுவதும் சர்ச்சைகளை உருவாக்கும் வினாயகர் சதுர்த்தி ஊர்வலம் கூட நாகப்பட்டினத்தில் அமைதியான முறையில் நடைபெறும். வினாயகர் ஊர்வலமும், நாகூர் தர்கா கந்தூரி ஊர்வலமும் ஒரே இடத்தில் இருந்து புறப்பட்டாலும் அமைதியான முறையில் நடைபெறும் என்பது இங்குள்ள மதச் சார்பின்மையைக் காட்டுகிறது.


வாழ்வாதாரமும் வாழ்வியல் முறைகளும்



      நாகப்பட்டின மக்களின் முக்கிய தொழில்கள் மீன்பிடி தொழிலும் விவசாயமும். தமிழகத்தில் மீன்கள் உற்பத்தியில் சென்னைக்கு அடுத்த இடத்தில் உள்ளது நாகை மாவட்டம். "கோலா" என்ற வகை மீன்கள் பிரத்யேகமாக நாகப்பட்டினத்தில் கிடைப்பவை. இவற்றில் புரதச்சத்தின் அளவு மிக அதிகம். மீன்பிடி தொழிலில் இங்குள்ள பெண்களின் பங்களிப்பு மிகப்பெரியது. நகரங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வது சில வருடங்களாகவே அதிகரித்துள்ளது. ஆனால் இங்குள்ள மீனவ சமூக பெண்கள் ஆண்களுக்கு இணையாகக் கடினமாக உழைப்பவர்கள். படகுகள் தயாரிப்பு தொழிலும் இங்கு மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

    பாலின விகிதத்தை உயர்த்த அரசு திட்டங்கள் தீட்டும் நிலையில் இம்மாவட்டத்தின் பாலின விகிதம் மாநிலத்தின் சராசரியை விட அதிகம். (1000 ஆண்களுக்கு 1025 பெண்கள்)



    வேதாரண்யம் பகுதி உப்பளங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக உப்புச் சத்தியாகிரகத்தில் தமிழகத்தில் உப்புக்காய்ச்சியது வேதாரண்யத்தில் தான்.  பூம்புகார் பகுதியில் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள் மிகப் பிரபலமானவை.

      நாட்டு மாடு வகைகளில் முக்கியமான ஒன்று உம்பளச்சேறி என்ற வகை மாடுகள். இவை நாகப்பட்டினத்தில் உள்ள உம்பளச்சேறி என்ற கிராமத்தில் வளர்க்கப்படுகின்றன. அதிக இழுவை திறன் கொண்ட இம்மாடுகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம்.  "வெண்கால், விரிகொம்பு, நெற்றிப் பொட்டு" ஆகியன இவ்வகை மாடுகளுக்கான அடையாளங்கள்.

         தொழில்துறை நிறுவனங்களும் இங்கு அதிகம். குறிப்பாக எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், அனல் மின் நிலையங்கள் ஆகியன பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன.
     


தமிழ் இலக்கியங்களும் வரலாற்றுக்  குறிப்புகளும்

     

     தமிழ் இலக்கியமான பட்டினப்பாலை எனும் நூலில் நாகப்பட்டினம் பற்றி பல பாடல்கள் உள்ளன. நாகப்பட்டினத்தில் கிடைத்த முதுமக்கள் தாழிகள், சங்க காலத்தில் இங்கு மக்கள் வாழ்ந்தனர் என்பதை உணர்த்துகின்றன.

      கிமு மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பர்மிய நூல் ஒன்றில், நாகையில் அசோகர் நிறுவிய புத்த விகாரம் பற்றிய குறிப்புகள் உள்ளன. சீனப் பயணி "யுவான் சுவாங்" தனது குறிப்புகளில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
      கிரேக்க அறிஞர் "தாலமி" நாகப்பட்டினத்தை முக்கிய வணிக மையம் என்று குறிப்பிடுகிறார்.
     ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் வரும் "புகார் காண்டம்"  குறிப்பிடுவது நாகை மாவட்டம் பூம்புகாரை தான். அங்கு கண்ணகிக்கு நினைவிடம் எழுப்பப்பட்டது.



     பூம்புகார் கடற்பகுதியில் 3 கிமீ தூரத்தில், 75 அடி ஆழத்தில் "கடலடி அகழ்வாராய்ச்சி" நடத்தப்பட்டது. 11000 ஆண்டுகளுக்கு முன்பு கடல்கோளால் அழிக்கப்பட்ட பெரும் நகரம் இங்கு கடலுக்கு அடியில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளரான "கிரகாம் ஹான்காக்" (Graham Hancock) தனது "Flooded Kingdom under the high seas" மற்றும் "Underworld"  ஆகிய புத்தகங்களில் பூம்புகாரில் உள்ள கடலடி நகரங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.  


     ஆராய்ச்சிக்கான செலவினங்களை காரணம் காட்டி பூம்புகாரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இந்த கடலடி நகரங்கள் சிந்து சமவெளி நாகரிகத்தை விட மிகப் பழைமையானவை என்று கருதப்படுகிறது. தற்போது கீழடி ஆராய்ச்சியை வலியுறுத்தி வரும் பலர் பூம்புகாரின் கடலடி அகழ்வாராய்ச்சிக்கு குரல் கொடுக்காதது ஏனென்று தெரியவில்லை.
   
 இப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க ஒரு இடம், இன்று மிகப்பெரிய இயற்கைச் சீற்றத்தால் நிலை குலைந்துள்ளது. இத்தகைய அழிவுகள் நாகைக்கு புதிதுமல்ல. இந்த நிலை  நாகப்பட்டனத்தின் முடிவுமல்ல. புதிய அத்தியாயத்தின் துவக்கம். சுனாமியின் அழிவிலிருந்தே மீண்ட மக்கள், விரைவில் புயல் சேதங்களில் இருந்தும் மீண்டெழுவார்கள். பாரதியின் இவ்வரியை நாகப்பட்டினத்திற்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த டெல்டா பகுதிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

    "வீழ்வேனென்று நினைத்தாயோ?"

    கருத்துகள்

    1. படிப்பவர்களை ஆராய்ச்சிக்கு தூண்டும் வகையில் இருந்தது கட்டுரை ....நல்லது

      பதிலளிநீக்கு
    2. Sila visayam Ippothan first time kelvi paduran ,.namma oora paththi...

      பதிலளிநீக்கு

    கருத்துரையிடுக

    இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

    கல்யாண சாவு

    தீர்ந்த நீரும் தீராத் தாகமும்

    நல்ல நேரம்