சர்காரின் இலவச அரசியல்


       கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பலராலும், குறிப்பாக இளைஞர்களால் பேசப்படும் செய்தி 'சர்கார்'. மாநில அரசின் திட்டங்கள் பற்றிய விமர்சனங்களைக் காட்சிப் படுத்தியதைக் கண்டித்து ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் திரையரங்குகளில் உள்ள பேனர்களைக் கிழித்தெறிந்தும், படம் திரையிடப்படுவதை நிறுத்தியும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்நிலையில் முதல்வர் உட்பட பல்வேறு அமைச்சர்கள் படத்தின் மீதான கடுமையான விமர்சனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் அப்படமானது மறுதணிக்கை செய்யப்பட்டு, சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன.

         ரசிகர்கள் பலர் அரசிற்கு எதிராக கடுமையான எதிர்வினைகளை வெளிக்காட்டி வருகின்றனர். தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை சட்டம் நம் அனைவருக்கும் வழங்கியுள்ளது. நாம் தேர்ந்தெடுத்த அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது தவறல்ல. திரைப்படங்கள் போன்ற மிகப்பெரிய ஊடகங்கள் மூலமாக இவற்றை வெளிப்படுத்தும் போது அக்கருத்துக்கள் பலரை சென்றடையும்.
 
   

 பொது வாழ்க்கையில் விமர்சனங்கள் சகஜம்தான். நம் மீது வீசப்படும் விமர்சனங்களை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்று அறிஞர் அண்ணா கூறியுள்ளார். அவ்வாறிருக்க இந்த திரைப்படத்திற்கு இவ்வளவு கடுமையான எதிர்வினைகள் தேவையற்றது தான். எதிர் விமர்சனங்களை அமைச்சர்கள் கூறுவதில் தவறில்லை. ஆனால் வன்முறை வெறியாட்டம், ரசிகர்கள் மீதான தாக்குதல்‌ போன்றவை கண்டிக்கத்தக்கது.
இவ்வளவு சர்ச்சைகளை உருவாக்கிய அந்த இலவச பொருட்கள் நமக்கு தேவையா என நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.


             இந்நிகழ்வில் நம் தேசத்தின் எதிர்காலம் என்று கருதப்படும் இளைஞர்கள் பலரின் செயல்பாடுகள் மிகவும் வருந்தும் வகையில் இருந்தன. திரைப்படத்தில் உள்ள காட்சியைப் போல தங்கள் வீடுகளில் உள்ள இலவச பொருட்களை எரித்து, அரசிற்கு எதிர்ப்பைத் தெரிவித்தனர். அவர்களின் இச்செயல் சரியான அணுகுமுறையா?

   

      தமிழக இளைஞர்கள் பலரின் அரசியல் புரிதலும், பகுத்தறிவும் நாளுக்கு நாள் கேள்விக்குறி ஆகிவருவது மிகவும் வருத்தமாக உள்ளது.  திரைப்படத்தில் உள்ள கருத்துக்களை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது மிகப்பெரிய மூடத்தனம்.
   

   தமிழக அரசும் இலவசங்களும்

    அரசின் இலவசம் என்பது இன்று நேற்று தொடங்கியது அல்ல. தமிழக அரசு நேரடியாக டிவி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கிட வில்லை. 1923 ஆம் ஆண்டு முதல் முறையாக இலவச மதிய உணவுத்திட்டத்தை தியாகராயச் செட்டியார் துவங்கி வைத்தார். அதனை காமராஜர் தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தினார். இத்திட்டம் சத்துணவுத் திட்டமாக மாறியதும், அதன் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களும் நாம் அறிந்தவையே. அறுபது ஆண்டுகள் தாண்டி, பல முன்னேற்றங்கள் அடைந்த பிறகும், இன்றும் சத்துணவை நம்பி பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் உள்ளனர்.

      பள்ளிகளில் மாணவர்களுக்கு 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன. இலவச பஸ் பாஸ், மிதிவண்டி போன்றவை தமிழகத்தின் கல்வி வளர்ச்சியில் மிகப்பெரிய அளவில் பங்காற்றியுள்ளன. நாட்டிலேயே பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் தமிழகம் தான் முதலிடம்.

     

    கல்வி, மருத்துவம் போன்றவை அத்தியாவசிய தேவைகள். மனிதவள மேம்பாட்டிற்காக அவற்றை இலவசமாக வழங்குவதில் தவறில்லை. ஆனால் மிக்ஸி, கிரைண்டர் போன்றவை அனாவசியம் என்று சிலர் கருதுகின்றனர். உண்மையில் இக்கருத்து ஒரு மேல்தட்டு வர்க்கத்தினரின் மனநிலையை தான் காட்டுகிறது.
        தமிழகத்தில் வழங்கப்படும் இலவசங்களில் பெரும்பாலானவை பெண்களின் முன்னேற்றம் தொடர்பானவை. இலவச கேஸ் (LPG) கொடுக்கப்பட்ட பிறகு, கிராமப்புற பெண்களுக்கு ஏற்படும் நுரையீரல் தொடர்பான நோய்கள் குறைந்துள்ளதாக WHO அறிக்கை கூறுகிறது. இதனை பின்பற்றி தான் மத்திய அரசு பிற மாநிலங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. மிக்ஸி, கிரைண்டர் போன்றவை வழங்கியதற்கு பிறகு, பெண்களின் பணிச்சுமை குறைந்துள்ளது.
 
            இலவசம் வழங்குவது பிச்சையளிப்பதை போன்றது என விமர்சிக்கின்றனர் பலர். தமிழகத்தில் வழங்கப்படும் சில இலவசங்களைக் காண்போம்.


  • மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திட்டம் - பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் ( ரொக்கம் மற்றும் தாலிக்கு அரைப்பவுன் தங்கம்)
  • ஈ.வெ.ரா.மணியம்மை நினைவு திட்டம் (தந்தையை இழந்த பெண்களின் திருமண உதவித் திட்டம்)
  • அன்னை தெரசா ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம்
  • சத்தியவானி அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்
  • பிறந்த குழந்தைக்கு 16 வகையான பொருட்கள்
  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம்
  • ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கான உயர் அதிர்வெண் கண்டறியும் கருவிகள்
                 இன்னும் பல திட்டங்கள் மூலம் தமிழக அரசு இலவச உதவிகளை வழங்கி வருகின்றது. பொருட்கள் வழங்குவதை பிச்சை, லஞ்சம் என்று கூறினால், பணமாகவே வழங்கப்படும் இத்திட்டங்களை என்னவென்று சொல்வது?
       மேலும் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது.  நம்மில் பலர் தனியார் கல்லூரிகளில் அரசு உதவித்தொகை பெற்று படித்தவர்கள் தான்.  தமிழக அரசு இலவசமாக லேப்டாப் வழங்குவதற்கு முன்னர், நம்மில் பலருக்கு லேப்டாப் என்பது கனவாகவே இருந்தது. விவசாயத்திற்கு இலவச மின்சாரம், மானிய விலையில் பொருட்கள் ஆகியனவும் இலவசங்கள் தான்.

        கல்விக்கான கடன் தொகையை தள்ளுபடி செய்வதாக அரசு தெரிவித்தால், நம்மில் எத்தனை பேர் வேண்டாம் என கூறுவோம்?    சில வாரங்களுக்கு முன்பு, பட்டேலுக்கு சிலை வைத்த செலவில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யலாம் என்று கூறினர். கடன் தள்ளுபடி என்பது இலவசம் இல்லையா?
     

  அம்மா   உணவகங்களில் உண்ணும் குடும்பங்களும் தமிழகத்தில் ஏராளம். அத்திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு பல மாநிலங்களில் அவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ‌‌‌‌‌‌‌ கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் கனவாக இருப்பது சொந்த வீடு. அவர்களுக்கு இலவச வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது.
       தமிழக அரசியலின் அடிப்படை சித்தாந்தமே சமூக நீதி அரசியல் தான். ஒருவருக்கு தேவையற்றதாக கருதப்படும் ஒன்று, மற்றவருக்கு கனவாக இருக்கலாம். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதில் நாட்டிலேயே தமிழ்நாடு தான் 69 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. இட ஒதுக்கீடு என்பது கூட ஒரு வகை இலவசம் தானே? இங்கு இலவசங்கள் வழங்குவது ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் தான்.
      இன்னும் ரேஷன் கடைகளில் இலவச அரிசி வாங்கி உண்ணும் குடும்பங்கள் பல உள்ளன. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் மூலம் இலவசமாக வழங்கப்பட்ட அரிசியின் அளவில் மாற்றம் செய்யப்பட்ட போது, அதனை கடுமையாக எதிர்த்து, புரட்சி பேசியவர்கள் இன்று இலவசங்களை எதிர்ப்பது ஏன்?
 
      இலவசம் வேண்டாம் என கூறும் நம்மில் எத்தனை பேர் கேஸ் (LPG) மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளோம்?

        இந்த ஒரு கேள்விக்கு மட்டும் உங்கள் மனதைத் தொட்டு பதில் கூறுங்கள். சர்கார் திரைப்படத்தில் கூறப்பட்டுள்ள இதே இலவசங்களுக்கு எதிரான கருத்தை, மத்திய அரசை சேர்ந்தவர்களோ, எச்.ராஜா போன்ற பாஜக-வினரோ கூறியிருந்தால், அப்போதும் நாம் அக்கருத்தை ஏற்று இலவசங்களை எதிர்த்திருப்போமா?
 

     
          இளைஞர்கள் பலர் தெளிவான கருத்துக்கள் இல்லாமல் உள்ளனர் என்பது தெளிவாகிறது. இங்கு கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப் படுவதில்லை. அக்கருத்தை கூறுபவரைப் பொறுத்து தான், நாம் அக்கருத்தை அணுகுகிறோம். நமக்கு பிடித்தமான ஒருவர் கூறும் கருத்தாக இருந்தாலும் அவற்றை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது முட்டாள்தனம். யார் கூறும் கருத்தாக இருந்தாலும் அவற்றை ஆராய்ந்து பார்த்து அணுகுவது தான் பகுத்தறிவு.



     
‌         வணிகரீதியில் கோடிக்கணக்கான செலவில் படம் எடுப்பவர்களுக்கு இலவசம் தேவையற்றதாக இருக்கலாம். ஆனால் அவற்றை நம்பி வாழும் பலருக்கு அது அவசியமான ஒன்று. தமிழக இளைஞர்கள் திரையரங்குகளில் தங்களது தலைவர்களை தேடுகிறார்கள் என்றும், நடிகர்களுக்காக சமூக வலைதளங்களில் சண்டையிடுகிறார்கள் என்றும் பிற மாநிலத்தவர்கள் நம்மைப் பற்றி விமர்சனம் செய்கின்றனர். இந்நிலையில் திரைப்படத்தில் நடிகர்களின் கருத்துக்களை நம்பி, தன் வீடுகளில் உள்ள இலவச பொருட்களை எரிப்பதும் உடைப்பதும் முட்டாள்தனமே அன்றி வேறில்லை.


நிஜமும் நிழலும்



       
          தனது ஆதர்சன நாயகனுக்காக செலவு வைத்த பேனர்களைக் கிழித்ததால் தான், அவர்கள் உணர்வு மிகுதியால் இச்செயல்களை செய்து வருகின்றனர். அனுமதியை மீறி பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் மீது தடியடி நடத்தப்பட்டது. ஆனால், அந்த திரைப்படக் குழுவினர் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் வெற்றி விழா நிகழ்ச்சி கொண்டாடுகின்றனர்.
            'தமிழ்', 'தமிழன்' போன்ற உணர்வுகளைத் தூண்டி ஆதாயம் தேடுவது அரசியலில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடக்கிறது. அவற்றிற்கு நாம் இரையாகாமல் கவனமாக இருக்க வேண்டும். அரசாங்கத்தை விமர்சித்து திரைப்படம் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் கொண்ட திரைப்படங்களுக்கே தமிழில் பெயர் வைப்பதால் 'வரி விலக்கு' அளிக்கப்படுகிறது. வரிவிலக்கு என்பது இலவசம் தானே? தவறுகளை விமர்சிக்கும் நாம், நல்லத் திட்டங்களையும் பாராட்ட வேண்டும்.

          சமூக நீதி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த கொண்டு வரப்பட்ட திட்டங்கள், இன்று வாக்கு‌ வங்கி அரசியலுக்காக பயன்படுத்தப்படுவது மறுக்க முடியாத உண்மை. அவற்றில் ஊழல் நடந்தால், அது கட்டாயம் தடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அரசின் உதவிப் பொருட்கள், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் போன்ற மக்களை சேர வேண்டும். கேஸ் (LPG) மானியத்தை விட்டுக் கொடுப்பது போன்று திட்டங்களில் மாற்றம் கொண்டு வரவேண்டும். இலவசங்கள் யாருக்கு வழங்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து தான், அதன் அவசியம் தீர்மானிக்கப்பட வேண்டும். ஒட்டுமொத்தமாக இலவசங்களை எதிர்ப்பது சரியல்ல.

"ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுன்டோ மன்னும் உயிர்க்கு"

குறிப்பு: மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் தெரிவிக்கலாம் (Please comment, if you have any different opinion)

         

கருத்துகள்

  1. நீ இதுவரை செய்த பதிவுகளில் இதுவே சிறந்த ஒன்றாகும்....மாற்றுக்கருத்து என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை ...... இனிவரும் பதிவுகளில் திருக்குறலோடு சேர்த்து அதன் அர்த்ததையும் பதிவு செய்தால் நன்றாக இருக்கும்..

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. இலவசங்களை என்ன பொருள் அதன் அவசியம் அதை பெறுபவர் வருமானம் தகுதி ஆகியவற்றை அறிந்து முழுமையாக அவை தேவைப்படுவோர்க்கு சென்றடையவேண்டும். நீ கூறுவது போல் நோக்கம் சமூக நீதிகாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்..
    கலைக்கு அடிமையாய் இருப்பது நன்று அக்கலைஞ்சனக்கு கீழ் இருப்பது அவர் செய்யும் தவறுகளை மறைக்கும் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Film la irka nalla vishathayum pakanum.... Athe Mari than government la irka nalla scheme ah yum pakanum nu solla varen....

      Nan film ah criticise panala..... film ah pathtu vtula ulla Freebies ah odachatha than criticise panren....

      Freebies ngrathu TV mixie grinder matum ilaye.... Nerya kudukrangak.... Elame venam nu epd solrathu

      நீக்கு
    2. Vijay oda market ah jeeva kooda compare pana mudiyathu la.... Joker than ithu ellathayum Vida Periya political film.... Yaru moolama oru vishayatha sonna nerya reach aagum nuu onnu irku la

      நீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Full article again ah padichu paru.... 1st para laye freedom speech thappu ilanu soliten....
      Tik Tok panravnglku than itha solirkn....

      நீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Mersal vanthapo Vijay ku Joseph Vijay, Christian nu muthirai kuthunanga....

      Enaku ipo Rajni fan muthirai kuthuringa avlothan....

      Intha point kooda intha article la potrkn🙇

      நீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. As you said, Vj ARM kooda compare panra alavuku lam enaku scene Ila....

    Views increase panra alavuku lam nan inum steps edukave ila...

    Google trends la topic search pani, keywords planner la words arrange Pani English la etho oru topic ah copy paste panunale, one month la kedaikra views one day la varum.....

    Tamil la Potta views eh varathu....

    பதிலளிநீக்கு
  10. ஒரு பிரச்சினையின் இருபுறமும் ஆராய்ந்து,
    அதற்கான தீர்வை இனிதாகவும், எளிதாகவும் மற்றும் நல் எடுத்துக்காட்டுகளுடன் கொடுக்கும் திறமை உன்னிடத்தில் அதிகம் உள்ளது..

    இதைவிட எளிதாக இந்த பிரச்சனையை புரிய வைக்க முடியாது என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை...

    வாழ்த்துக்கள் தோழா...
    உனது திறமைகள் தழைக்க...

    'ஒரு விரலுக்கு எதிராகவோ..
    இரு விரல்களுக்கு ஏற்ப்பவோ..
    இங்கு கருத்துக்கள் பதிவு செய்யவில்லை,
    என முழு புரிதலோடு படித்தாலே தெரிந்துவிடும்'..

    "ஆள மட்டுமே நினைக்கும் அரசியல்வாதிகளிடத்தில்,
    அறியாமை கொண்ட ஆடுகள் கூட்டம் ஆகாமல்...

    தன் தலைவன் கூறுவதே தாரக மந்திரம்,
    என தலை ஆட்டும் பொம்மை ஆகாமல்...

    அனைத்தும் ஆராய்ந்து அறியப்பட வேண்டும்..
    தவறுகள் தட்டிக் கேட்கப்பட வேண்டும்..
    அதற்கான தெளிவுகள் கொடுக்கப்பட வேண்டும்..
    அல்லது திருத்தி கொள்ளப்பட வேண்டும்...
    நன்மைகள் பாராட்டி பகிரப்பட வேண்டும்....

    'தனக்கு தேவையற்றது,
    யாருக்கும் தேவையில்லை' என்பதும்..
    'எனக்கு பிடித்தது,
    எல்லோருக்கும் பிடிக்கவேண்டும்'
    என்பதும் மூடதனமே..

    படத்தின் நல்லது, கெட்டது கூற,
    இது திரை விமர்சனம் அல்ல..
    பிரச்சனையின் புரிதலுக்கு கூறிய,
    தெளிவு கொடுக்கும் விமர்சனம்..

    சுட்டி காட்டியது தவறு என உணர்வோம்..
    திரையில் வருவதெல்லாமும்,
    தரையில் சாத்தியமில்லை என அறிவோம்..
    விழிப்புணர்வு பெறுவோம்..
    வளர்ச்சியை காண்போம்...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கல்யாண சாவு

தீர்ந்த நீரும் தீராத் தாகமும்

நல்ல நேரம்