தமிழக அரசியலில் இளைஞர்கள்
தமிழக இளைஞர்கள் மத்தியில் அரசியல் ஈடுபாடு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதற்கு முந்தைய தலைமுறையினர்களிடம் காணாத ஒரு எழுச்சியை இப்போதைய தமிழக இளைஞர்களிடம் காணமுடிகிறது. இதற்கு முக்கிய சான்றாக அமைந்தது ஜல்லிக்கட்டு போராட்டம். பறிக்கப்பட்ட நம் பாரம்பரியத்தை மீட்டெடுக்க தன்னெழுச்சியாக களத்தில் இறங்கியதன் மூலம், தேசிய ஊடகங்களே திரும்பிப் பார்க்காது என்ற நிலையை மாற்றி, உலகையே உற்று நோக்க வைத்தனர்.
கடந்த காலங்களைப் போலன்றி, இப்போது இளைஞர்கள் அரசியல் பற்றி பேசுவதிலும் பகிர்வதிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக அமைவது சமூக ஊடகங்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்த நிலையில் நம்மிடம் உள்ள குறைகளையும் நாம் ஆராய்ந்து பார்த்து அவற்றை சரிசெய்து கொள்வது காலத்தின் அவசியமாகும்.
மாய உலகின் கட்டுப்பாட்டில் இளைஞர்கள்
உலகமே உள்ளங்கையில் வந்த பிறகு, சமூக வலைதளங்கள் நம் வாழ்வில் மிகப்பெரிய அங்கமாக உள்ளது. நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக அவை செயல்படுகின்றன. அவற்றை நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வரை, நமது உணர்வுகளை அவற்றில் வெளிப்படுத்த முடியும். ஆனால் தற்போது நம்மில் பலர் சமூக ஊடகங்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டோம். இதன் விளைவாக, நமது உணர்வுகள் எவ்வாறாக இருக்க வேண்டும் என்பதையும் அவைதான் நிர்ணயிக்கின்றன.
நம்மில் பலர் Facebook, Twitter போன்றவற்றில் நமக்கு பிடித்தமான கருத்துக்கள் கொண்ட பக்கங்களை பின்தொடர்வதன் மூலம், அதிலுள்ள கருத்துக்களை முழுமையாக நம்பி, அவற்றை உலகமென கருதுகிறோம். அவற்றின் உண்மைத் தன்மையை அறியாமல் மற்றவர்களுக்கு பகிர்வதன் மூலம், பொய்யான தகவல்கள் அனைவர் மத்தியிலும் பரப்பப்படுகின்றன.
தமிழக இளைஞர்கள் மத்தியில் இப்போது மிகப்பெரிய அளவில் பிரபலமாக உள்ளது மீம்ஸ் எனப்படும் கேலிச் சித்திரங்கள் தான். நகைச்சுவை தொடர்பான மீம்ஸ் பகிரப்படுவதில் தவறில்லை. ஆனால், இப்போது செய்திகளையே நாம் மீம்ஸ் மூலமாக தான் அறிந்து கொள்ளும் நிலை உள்ளது. இத்தகைய சூழலில், சமூகம் மற்றும் அரசியல் தொடர்பான கருத்துக்களை பகிரும் முன்பு நாம் பல முறை யோசிக்க வேண்டும்.
மற்றவர்களின் உருவத்தை கேலி செய்வது, தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்வது போன்றவை ஆரோக்கியமான அரசியலாக இருக்காது.
மற்றவர்களின் உருவத்தை கேலி செய்வது, தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்வது போன்றவை ஆரோக்கியமான அரசியலாக இருக்காது.
கண்மூடித்தனமான வெறுப்புணர்வுகள்
ஒருவரது கருத்துக்களையும், சித்தாந்தங்களையும் முழுமையாக அறியாமலே, அவர்களை நாம் கண்மூடித்தனமாக வெறுப்பதன் மூலம், அவர் செய்யும் நற்செயல்களும் நமக்கு தவறாகவே தெரிகின்றன.
நம்மில் பலர் நல்லவர்களாக வாழ்வதைக் காட்டிலும், பிறர் மத்தியில் நல்லவர்களாகக் காட்டிக் கொள்வதில் தான் பெரும் முயற்சி செய்கின்றோம். நம்மில் சிலர் காந்தியையும் பெரியாரையும் வெறுப்பதும், கலாமை நேசிப்பதும் அவர்களின் கருத்தியலை ஆதரிப்பதாலோ, எதிர்ப்பதாலோ அல்ல. நாம் பார்த்த, கேட்ட சில பதிவுகளையும் செய்திகளையும் நம்புவதால் தான்.
படித்த இளைஞர்களில் பெரும்பாலனவர்கள் விவசாயம், கிராமங்கள், சிறுதொழில்களின் முக்கியத்துவம், பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு ஆகியன பற்றி பதிவிடுவது மகிழ்ச்சியாக இருந்தாலும், அந்த கருத்துக்களை இறுதி வரை வலியுறுத்திய காந்தியடிகளை இழிவு படுத்தி பேசுகின்றனர் என்பது வியப்பைத் தருகிறது. பெரியாரை விமர்சனம் செய்பவர்கள் பலருக்கு அவரது கருத்துக்களே தெரியாது என்பதே உண்மை
"உனக்கு ஒருவனது செயல் பிடிக்கவில்லை என்றால் அச்செயலை மட்டும் வெறு; அந்த மனிதனை வெறுக்காதே" என்று விவேகானந்தர் கூறியுள்ளார். அதேபோல், நமக்கு எதிர்க்கருத்து கொண்டவர்கள் கூறும் கருத்துகளையும் நாம் கவனிக்க வேண்டும்.
குஜராத் மாநில அரசு கட்டிய சிலையை விமர்சனம் செய்யும் நாம், நமது மாநிலத்தில் இலவச பொருட்கள் வழங்குவதற்கு அரசு செலவிட்ட பணமதிப்பை பற்றி கவலைக் கொள்வதில்லை. அதே சமயத்தில் தனக்கு பிடித்த நடிகர்களுக்கு உயரமான பேனர்கள் வைப்பதில் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறோம்.
அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யும் நம்மில் பலருக்கு, அரசின் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு இருப்பதில்லை. திரைப்படங்கள் வெளியாகும் போது அவற்றை ஆராய்வதில் உள்ள ஆர்வம், அரசு வெளியிடும் திட்டங்களை அறிந்து கொள்வதில் ஏன் வருவதில்லை?
தெர்மாகோல் திட்டத்தை அதிகமாக கிண்டலடித்த நாம், பள்ளிக்கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள சிறப்பான மாற்றங்களை பாராட்டாதது ஏன்?
மக்கள் மீதுள்ள அக்கறை என்பது, அரசாங்கத்தை விமர்சிப்பது மட்டுமல்ல, அதன் நல்ல திட்டங்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் தான்.
இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள்
மேற்கூறிய கருத்துக்கள் மூலம் நான் இளைஞர்களை குற்றம் சாட்டவில்லலை. நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் தான் உள்ளது என நமது பிதாமகர் அப்துல் கலாம் அவர்கள் கூறியுள்ளார். அவற்றை நிறைவேற்ற வேண்டுமெனில், அடிப்படை அரசியலை நாம் கற்கவேண்டும்.
சென்னை பெருவெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது, இளைஞர்கள் பங்களிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால் நாம் அனைத்து பிரச்சனைகளையும் உணர்வுப்பூர்வமாக மட்டுமே அணுகக் கூடாது. நமது உணர்வுகளை தூண்டிவிட்டு, ஆதாயம் தேடுபவர்களுக்கு நாம் இறையாகி விடக்கூடாது.
மேற்கூறிய விமர்சனங்கள் முழுவதையும் எனக்கும் சேர்த்து ஏற்றுக்கொண்ட பிறகு தான், உங்களது பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு"
நன்றி...
நன்றி...







நல்ல ஆரோக்கியமான பதிவு..
பதிலளிநீக்குஉன் தெளிவு அனைவருக்கும் வர உன் எழுத்து பங்களிப்பு அவசியம்..
விரைவில் நம் நாட்டில் நல்ல அரசியல் வரும் என்பதில் ஐயமில்லை.
அனைவரின் அடிமனதிலும் நாட்டை உயர்த்த உணர்ச்சி உள்ளது.
பதிலளிநீக்குஅறியாமையும், புரியாமையும் தடுத்தது.
உனது வரிகள் அதை உடைத்தது...
ஒவ்வொரு எழுத்தும் எழுச்சி கொடுத்து...
உன்னால் பெருமிதம்...
வாழ்த்துக்கள் தோழா...
"முழுமையான அறிதலும், சரியான புரிதலும் தேவை நம்மிடத்தில்..
பிறர் குறைகளை கூறாது..,
தன் குறைகளை தான் அறிந்து தவிர்பதுவே நம் முன்னேற்றம்.
அதுவே நம் நாட்டின் முன்னேற்றம்..
அனைத்து உயிரிடத்திலும் உள்ளது குறை..
அறிந்து திருந்தியதே மனிதம்..
அறியாது தொடர்ந்ததோ மிருகம்..
நல்மனிதன் ஆக முயல்வோம்...
அதுவே நல்தலைவனாக மாற்றும்..
நம் ஒரு ஒற்றுமை உலக நாடுகள் உற்று நோக்க..
அதை சான்றாக மட்டுமே கொடுக்காமல்,
அடுத்த சாதனையை கொடுப்போம்.
ஒவ்வொரு நாளும் ஒற்றுமை கொள்வோம்,
உலகநாடுகளிடத்தில் நம் உயர்வை காண்போம்"...
நன்றி...
Vinoth - valuable points share paniruka
பதிலளிநீக்குவினோத், உன்னுடைய இந்த படைப்பை மனதாரப் பாராட்டுகிறேன்... இதில் சில இடங்களில் என்னை நான் படித்தேன்... என் தவறை உணர்ந்தேன்... உணர்த்தியமைக்கு நன்றி... மாறிட முயல்கிறேன்....
பதிலளிநீக்குநன்றி ....
அருமையான பதிவு முடிவில் உள்ள திருக்குறள் உனது பதிவின் ஆழ்ந்த ஆராய்ச்சித்தன்மையை வெளிப்படுத்துகிறது வாழ்த்துகள் .....எழுத்தாணியின் வேகம் அழுத்தம் குறையாமல் தொடரட்டும்
பதிலளிநீக்குVery nice da...but try to put story in english also..it will reach more..its only my perception
பதிலளிநீக்குSooperr Vinoth inda maari niraya pannungaa
பதிலளிநீக்குWaiting to support����