தமிழகத்தை ஆளப்போவது யார்???



    தமிழகத்தின் இரண்டு பெரும் அரசியல் தலைவர்களை நாம் இழந்துள்ள இந்த நிலையில், தமிழகத்தை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுகிறது. தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பஞ்சமில்லை என்றாலும் இக்கேள்விக்கு ஒருமித்த பதிலளிப்பது கடினம்தான். திராவிடம், தமிழ்தேசியம், ஆன்மிகம், மய்யம், இந்துத்வா போன்ற பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகள் உள்ள தமிழகத்தில் பலருக்கும் எழும் கேள்வி "தமிழகத்தை ஆளப்போவது யார்?"

      அரசியலுக்கு யாரெல்லாம் வரலாம், யாருக்கெல்லாம் ஆளும் தகுதி உள்ளது என ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு சாதகமாக வாதங்களை வைத்தாலும், உண்மையில் மக்களை ஆளும் உரிமை யாருக்கு உள்ளது??? உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி நாடாக விளங்கும் இந்தியாவில் மக்களை ஆளத் தகுதியுடையவர்கள் யாரென்ற வினாவே தவறென்று தான் கூறவேண்டும். இந்தியா மன்னராட்சி நாடு அல்ல. மக்களாட்சி முறையில் ஆட்சி நடக்கும் ஒரு நாட்டின் உண்மையான ஆட்சியாளர்கள் மக்களாகிய நாம் தான்.


           சட்டமியற்றும் அதிகாரம் கொண்டவர்கள் தங்களை மக்களின் தலைவராக் காட்டிக் கொள்வதாலும், அதை நாம் நம்புவதாலும் தான், நமது பகுதி கவுன்சிலரைக் கூட கேள்வி கேட்க அஞ்சுகிறோம். மக்கள் அங்கீகரித்ததால் தான் அவர்கள் பதவியில் உள்ளனர். கோட்டையில் அமர்ந்திருப்பதால், அவர்கள் ஒன்றும் அரசர்கள் அல்ல. நமக்குத் தேவையான பணிகளைச் செய்ய நாம் நியமித்த பிரதிநிதிகள், இன்னும் எளிமையாக சொன்னால் அவர்கள் நம்மிடம் சம்பளம் வாங்கும் வேலைக்காரர்கள்.


     தமிழனாக பிறந்தவன் தான் முதல்வராகி மக்களை ஆளவேண்டும் என்று சிலர் கூறும் போது நாம் சிந்திக்க வேண்டியது, முதல்வர் என்பவர் நம் தலைமைப் பணியாளர். அவர்களுக்கு சம்பளம் வழங்கவும், மக்கள் பணிகளைச் செய்யவும், நிதிகளை வரிப்பணம் மூலமாக வழங்கும் மக்களாகிய நாம் தான் உண்மையான ஆட்சியாளர்கள். நாம் தான் முதலாளிகள் என்ற எண்ணம் நமக்கு வராதவரை, நாம் நமது பிரதிநிதிகளைக் கேள்வி கேட்க மாட்டோம்.

    
     தனது பலம் தெரியாமல், பாகனின் அங்குசத்தால் இயக்கப்பட்டு பிச்சையெடுக்கும் யானை போல, நம்மிடம் உள்ள வாக்குகளின் வலிமை அறியாமல் அவற்றை பணத்திற்காக விற்றுக் கொண்டிருக்கிறோம். நம்மிடம் வாக்குக்காக கையேந்துபவர்களிடமே லஞ்சம் வாங்கும் அக்கணமே, அவர்கள் முதலாளிகளாகிறார்கள்.

     மக்களாட்சியின் அடித்தளமான உள்ளாட்சி அமைப்புகளுக்கு  இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடவோலை முறையில் தேர்தல் நடந்ததாக உத்திரமேரூர் கல்வெட்டுகள் கூறுகின்றன. அப்படிப்பட்ட தமிழகத்தில் இன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரதிநிதிகள் இல்லை. பிறமொழி பேசும் மக்களை வசைபாடும் சமயங்களில் மட்டுமே தமிழ் உணர்வு வரும் நம்மில் பலர் இதனை யோசிப்பதில்லை. தயாரிப்பாளரிடம் சம்பளம் பெற்று நடிக்கும் நடிகர்களை, நாம் போட்ட பிச்சையில் வாழ்பவர்கள் என்று கூறும் நாம், நாம் அளித்த வாக்குகளால் வெற்றி பெற்ற அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்க முடியாதவர்கள் ஆகிறோம். காரணம் இங்கு பிச்சையிட்டவர்கள் அவர்களாகிறார்கள்.
   
  ‌‌‌‌‌‌‌  
 நம்மில் பலருக்கு நம் தொகுதியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் கூட தெரியாது. தற்போதைய இளைஞர்களில் பலர் அடிப்படை அரசியல் விழிப்புணர்வு அற்றவர்களாகவும், உணர்வுப்பூர்வமாக மட்டுமே எல்லா இடத்திலும் செயல்படுகிறோம் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. இளைஞர்கள் தங்களது அரசியல் அறிவினை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


     நான்  மற்றவர்களை விமர்சனம் செய்யுமளவிற்கு உத்தமனல்ல. இக்கட்டுரையில் உள்ள அனைத்து விமர்சனங்களையும் உங்களில் ஒருவனாக இருந்து, அவ்விமர்சனங்களை ஏற்றுக்கொண்ட பிறகே அவற்றை உங்கள் பாதங்களுக்கு உரிதாக்குகிறேன். தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவையே ஆளப்போவது மக்களாகிய நாம் தான் என்பதை மறந்து விடவேண்டாம்.
        

கருத்துகள்

  1. லஞ்சமாக பணம் பெற்றதால் என்னவோ தெரியவில்லை...,

    மக்கள் தங்களது சுயமதிப்பு அறியாமல் , உரிமைகளை விற்று விசுவாசிகள் என்று சொல்லிக்கொண்டு அடிமைகளாக இருக்கிறோம் என்று உணராமல் வாழ்கின்றனர்.

    இங்கு விசுவாசம் என்பது நம் முன்னேற்றத்திற்காக எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி நேர்வழியில் உழைப்பவர்களுக்கு,
    நாம் தரும் தர வேண்டிய ஒன்றே தவிர,
    பணத்திற்கு கொடுப்பதல்ல...

    "மக்கள் உணர..,
    மாற்றங்கள் நிகழ..,
    மாணவர்கள் எழுச்சி கொண்டு..,
    முன்னோர்களின் ஆலோசனை பெற்று..,
    அரசியல் அறிந்து...,
    ஆள வருவோம்.."
    என்று இளைஞர்களை உறுதியளிக்க தூண்டும் வகையில் உள்ளது இப்பதிவு...

    வாழ்த்துக்கள் தோழா....
    உன் எழுச்சி எழுத்துக்கள் தொடர...

    பதிலளிநீக்கு
  2. மக்களாட்சி பற்றி மக்களுக்கு தெரியாதது வருத்ததுக்குரியதாகும்...
    மேலும் கேள்வி கேட்கும் எண்ணம் நம்மில் பலருக்கு இருப்பதில்லை..
    இவற்றை மாற்ற இளைஞர்கள் பங்களிப்பு மிக அவசியம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் சரியாக சொல்லப் போனால் இளைஞர்கள் அரசியல் பற்றிய அறிவினை வளர்த்துக்கொள்ள வேண்டும்....
      சமூக வலைதளங்களில் வரும் அனைத்தயும் அப்படியே நம்பக்கூடாது....
      கடந்த காலங்களைவிட இப்போது இளைஞர்கள் மத்தியில் அரசியல் ஈடுபாடு அதிகம் உள்ளது.... ஆனால் போதிய அரசியல் அறிவு இல்லாமல், உணர்வுகளால் தூண்டப்படுகிறார்கள்.....

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கல்யாண சாவு

தீர்ந்த நீரும் தீராத் தாகமும்

நல்ல நேரம்